03

ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ..

1916 இல் பாரதி சுதேசமித்திரனில் ஹைக்கூ குறித்து கட்டுரை எழுதியும் கூட..தமிழ் கவிஞர்களும்..தமிழ் இலக்கிய உலகும் இவ்வடிவத்தை பெரிதாய் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் பின் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே 1966 ஜனவரியில் கணையாழி இதழில் எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூ குறித்தும்.. சில ஜப்பானிய கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டார்.. அவரைத் தொடர்ந்து ..

நடை இதழில் 1968 இல் சி.மணி சில ஆங்கில ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.. பின்னரே தமிழ் கவிஞரிடையே இதன் பால் ஈர்ப்பாக..

1974 இல் பால்வீதி எனும் தனது சர்ரியலிஸ கவிதைத் தொகுப்பில் கவிஞர் அப்துல் ரகுமான் சிந்தர் எனும் பெயரில் ஆறு ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டார். இதுவே தமிழில் நேரடியாக வெளியான முதல் ஹைக்கூக்கள்..

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்.

இளவேனில் இரவு
நட்சத்திர முள்ளில்
விரக நிலவு.

இவ்விரண்டும் கவிக்கோ பால்வீதியில் எழுதிய ஆறில்..இரண்டு..அதன் பின்..

தமிழின் முதல் ஹைக்கூ தொகுப்பாக..

1984 ஆகஸ்ட்டில் ஓவியக்கவிஞர் அமுதபாரதி புள்ளிப்பூக்கள் எனும் முதல் ஹைக்கூ கவிதை தொகுப்பு நூலை கொண்டுவர.. அதை தொடர்ந்து அதே ஆண்டில் நவம்பர் மாதம் கவிஞர்.அறிவுமதி தனது புல்லின் நுனியில் பனித்துளி எனும் தொகுப்பை வெளியிட்டார்.

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல். –  அமுதபாரதி

( புள்ளிப் பூக்கள் – 1984 )

பூவைவிட்டு இறங்காதே
இறக்கை முறிந்த வண்ணத்துப்பூச்சியே
உனக்காக எறும்புகள்.

நடுப்பகல்
சுடுமணல்
பாவம்..என் சுவடுகள். –  அறிவுமதி

( புல்லின் நுனியில் பனித்துளி – 1984)

அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளியில் கவிக்கோ அப்துல் ரகுமான் “வாமனர்களுக்கு ஒரு வரவேற்பு” எனும் பெயரில் அணிந்துரை வழங்கியிருந்தார்..அதில் ஹைக்கூவின் விதிமுறைகளையும் கோடிட்டு காட்டியிருந்தார்.. நானும் அதைப் பார்த்தே ஹைக்கூ எழுதப் பழகினேன்.. எனக்கு ஹைக்கூவை அறிமுகப் படுத்தியது அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளியே.

இதே காலக் கட்டத்தில் 1988 ஏப்ரல் மாதத்தில் தமிழ் ஈழத்தின் முதல் ஹைக்கூ நூலாக சு.முரளிதரன் எழுதிய கூடைக்குள் தேசம் வெளியாகியது.

தி.லீலாவதி ஆங்கில ஹைக்கூ பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டதோடு..பல ஹைக்கூ கட்டுரைகளை எழுதினார்..இருப்பினும் பெண்களில் நேரடித் தமிழில் ஹைக்கூவை எழுதி தொகுப்பாக்கி புத்தகமாக்கிய பெருமைக்குரிய முதல் பெண்மணி முனைவர்.மித்ரா அவர்களே.

இன்னும் பலர் பின்னாளில் தொடர்ந்து எடுத்துச் சென்று வளர்த்தெடுத்தார்கள்.

துவக்கத்தில் அறிமுகமான போது சற்றே தொய்வடைந்த ஹைக்கூ..பின்னாளில் பலரது பங்களிப்போடு அசுர வளர்ச்சியைப் பெற்று திகழ்கிறது..ஆம்..தமிழில் அறிமுகமாகிய இந்த குறுகிய காலத்திலேயே ஐநூறுக்கும் மேலான புத்தகங்கள் வெளியாகி உள்ளன.. பல கவிஞர்களின் முதல் கவிதை நூல் ஹைக்கூவாக இருக்கிறது.. இக்கவிதை வடிவத்தை பல ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி மேற்படிப்பிற்காக கையாள்கிறார்கள்.. பல்கலை.. மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் மாணவர்களின் பாடத்தில் ஹைக்கூ இணைக்கப் பட்டுள்ளது.. ஹைக்கூவிற்கு கிடைத்த பெருமை..இத்தகைய பெருமை கொண்ட ஹைக்கூவை எப்படி எழுதுவது..அதன் விதிமுறைகள் என்ன..எப்படி எழுதினால் சிறப்பான ஹைக்கூ அமையும்..என்பதை அறிந்து கொள்ள காத்திருங்கள்…அதுவரை… இதனை அசைபோட்டுக் கொண்டிருங்கள்..

பெயரில்லா மலையொன்றை
அதிகாலைப் பனி மூடும்
வசந்தகாலம்.

– மட்சுவோ பாஷோ ( 1644 – 1694 )

இன்னும் வரும்..

தொடர் 02 


1 Comment

Viji Senthil · செப்டம்பர் 26, 2024 at 9 h 42 min

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்

ஆஹா……

Comments are closed.

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.