பாடல் – 55
அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார்.
(இ-ள்.) அருமறை – பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத – காப்பாற்றாத, நட்பும் – நட்பாளனும்; பெருமையை – பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு – தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த – தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் – பெண்ணும்; யாண்டானும் – எங்காயினும், செற்றம்கொண்டு – கோபங்கொண்டு; ஆடும் – அவன்மேல் குற்றங் கூறுகின்ற, சிறு தொழும்பும் – குற்றலாளனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் – ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்; (எ-று.)
(க-ரை.) ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக்கருதும் பெண்ணும் தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் என்பது.
அருமறை – அருமை மறை. அருமை – சொல்லக்கூடாமை. மறை – மறைக்கப்படுவது; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டது. நட்பு, தொழும்பு; அவற்றையுடையவர்க்கு ஆகுபெயர். பெருமை – ஒரு பெண்ணுக்குக் கற்பால் உண்டாகும் பெருமை. அறத்தின் நீங்கிய பெண் உருவில் மட்டும் பெண்ணே என்பார் பெண்பால் என்றார். யாண்டு என்பது தன் தலைவனுக்குப் பகைவர் அயலார் நட்பினராகிய இடம். ஆன் : ஆயின் என்பதன் மரூஉ. ஆடுதல் – பேசுதல். ஒற்றாள் : இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
ஒற்று – துறந்தார்முதலியமாற்றுருக்கொண்டு பகைவரிடஞ்சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர். ஒற்று : முதனிலைத் தொழிலாகுபெயர்.