கம்பராமாயண அனைத்துப் பாடல்களிலும் விரவிக் கிடக்கிறது. இனிய ஓசை நயமிக்க கம்பனின் கவிதை வரிகள் யுகம் யுகமாய் நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.
கம்பனின் கவிதை வரிகளில் குவிந்துள்ள சொற்கள் களஞ்சியமாய் திகழ்கின்றன. சூழல், காலம், நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருவது மிகச் சிறப்பு.
“வண்ணம்” எனும் சொல் கொண்டு கம்பன் தனது பாடலில் பாதி இராமாயணத்தை சொல்லிவிட்டதாக சொல்வார்கள். இங்கே வண்ணம் எனும் சொல் நிறம் மற்றும் திறன் என எடுத்தாளுகிறார் கம்பர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)
(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = உய்யும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்;மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் = கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)
இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகைஉயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம் (திறமை) என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம்.
இங்கே பாருங்கள்…..
கவியரசு கண்ணதாசனும் வண்ணம் எனும் சொல்லை தனது பாடல் வரிகளில் திறனுடன் எடுத்தாண்டது… இந்த கம்பராமாயண வரிகளின் தாக்கம் தான் என நினைக்கிறேன்…
படம் : பாசம்
இசை : M.S.V. ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : பி.பி.சீனிவாஸ் & பி.சுசீலா
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
இன்னும் ருசிப்போம் ரசிப்போம் கம்பன் கவிநயத்தை.
1 Comment
M.CHINNASWAMY · மே 21, 2019 at 13 h 40 min
அற்புதம்…
Comments are closed.