தொடர் 21.
ஹைக்கூவில் மகளிரின் பங்கு.
தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும், சிறப்பான பல கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது.
1987 ல் டாக்டர் தி.லீலாவதி என்பவர் ஜப்பானிய மொழிபெயர்ப்பு ஹைக்கூ நூல் ஒன்றை வெளியிட்டார். இதுவே பெண் ஒருவரின் ஹைக்கூ பங்கெடுப்பு..
இதன் பின், 1990 ல் முதுமுனைவர் மித்ரா அம்மையார் நேரடி தமிழ் ஹைக்கூ நூலை வெளியிட்டார். அதே ஆண்டில் டாக்டர்.தி.லீலாவதி அவர்கள் “இதுதான் ஹைக்கூ” என்ற ஹைக்கூ குறித்த கட்டுரை நூலினை வெளியிட்டார். இது 1949 இல் ஆங்கில ஹைக்கூ கட்டுரை மற்றும் ஆய்வாளரான ஆர்.எச்.பிளித்தின் ஆய்வு நூலின் மொழிபெயர்ப்பு என்போரும் உண்டு. இதனை டாக்டர்.தி.லீலாவதி மறுக்கவும் செய்தார். அதன்பின்.. 1997 ல் கவிஞர்.நிர்மலா சுரேஷ் “ஹைக்கூ கவிதைகள்” எனும் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார்.. பொதுவில் 1990 க்கு பிறகே பெண்கள் ஹைக்கூவில் காலூன்றத் துவங்கினார்கள் எனலாம்.
- பரிமளமுத்து “மழைத் தூறல்கள்” தொகுப்பு*
- பாலரஞ்சனி சர்மா “மனசின் பிடிக்குள்” தொகுப்பு
- மித்ரா “மித்ராவின் ஹைக்கூக்கள்”
- விஜயலட்சுமி மாசிலாமணி “மூக்குத்தி பூக்கள்”
- மரியதெரசா “துளிப்பா தோப்பு”
- கு.அ.தமிழ்மொழி
- க.காயத்ரி
- புதுவை கு.தேன்மொழி
- ரேவதி இளையபாரதி
- ஓவியம் தமிழ்ச்செல்வி
- விக்னா பாக்கியநாதன்
- பரிமளம் சுந்தர்
- சுவாதி
- இ.பரிமளம்,
இவர்களைத் தொடர்ந்து, இன்றும்… பல பெண் கவிஞர்கள் மிகச் சிறப்பாகவே ஹைக்கூவை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூல் வெளியீடும் செய்திருக்கிறார்கள்.
உங்களின் பார்வைக்கு சில பெண் கவிஞர்களின் ஹைக்கூக்கள்.
தேவர்கள் தெரியாமல்
குடிக்கும் சுருட்டு
விண்மீன்கள்.
– கவிஞர்.சுவாதி (காற்று சொன்ன ஹைக்கூ 1997)
வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட் இங்கு
வயல்வெளிகளில் பவர்கட்.
– பரிமளமுத்து (இலையுதிர்காலம் நிரந்தரமல்ல)
காடுகள் அழிந்தன
பட்ட மரமெங்கும் பறவைகள்
இரங்கல் கூட்டம்.
– கவிஞர்.மித்ரா (கிண்ணம் நிறைய ஹைக்கூ..1995)
நன்றி மீண்டும் வருக
பயமாய் இருந்தது
அரசு மருத்துவமனை.
– பாலபாரதி. (இதயத்தில் இன்னும்..தொகுப்பு)
மரமிழந்த
குயில்
காடழிப்பு.
– க.காயத்ரி
சுறுசுறுப்பான
தேசிய விளையாட்டு
தேர்தல்.
சோம்பேறி நாட்டில்
சுதந்திர தினம்
விடுமுறை நாள்.
– இ.பரிமளம்
தலைமுறைக் கோபம்
அடி விழ..அடி விழ..
அதிரும் பறை.
– மித்ரா
சேலையைத் தெரியும்
யாருக்கும் தெரிவதில்லை
உசிரு + மனசு = பெண்.
– கு.தேன்மொழி
தாய்ப்பால்
நஞ்சாகிறது
கள்ளிப்பால்.
– கு.அ.தமிழ்மொழி. (சிறகின் கீழ் வானம்)
துவக்கத்தில் ஹைக்கூவிற்கும், சென்ரியுவிற்கும் வித்தியாசம் தெரியாமலேயே படைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பாரும் உண்டு. அது உண்மையும் கூட. இங்கு நான் மேற்கோள் காட்டிய பலவும் சென்ரியுக்களே..
அடுத்து இன்னும் சில பெண் கவிஞர்களது படைப்புகளை காண்போம்.
1 Comment
TikTok Algorithm · ஏப்ரல் 16, 2025 at 16 h 12 min
I am extremely inspired together with your writing abilities as neatly as with the format in your weblog.
Is that this a paid subject or did you customize it
yourself? Anyway stay up the excellent quality writing, it is rare to look a great weblog like this one these
days. Stan Store!