பாடல் – 70

காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந்
தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.

(இ-ள்.) காவோடு – சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் – அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் – தோண்டுவித்தவனும்; நாவினால் – நாவினால் ஓதி, வேதம் – வேதத்தை, கரை கண்ட – முடிவுகண்ட, பார்ப்பானும் – அந்தணனும்; தீது – தீய வழியை, இகந்து – கடந்து, ஒல்வது – (தனக்கு) இசையும் பொருளை, பாத்து – பகுத்து, உண்ணும் – உண்கின்ற, ஒருவனும் – ஒப்பற்ற இல்லறத்தானும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், செல்வர் எனப்படுவார் – செல்வத்தையுடையா ரென்று கருதப்படுவார்; (எ-று.)

(க-ரை.) தோப்பும் குளமும் அமைத்தவனும் மறைநூலோதி யுணர்ந்தவனும், பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் இல் வாழ்வானும் உண்மைச் செல்வராவர் என்பது.

காவோடு குளந்தொட்டான் என்பதில் மூன்றனுருபு வேறு வினை உடனிநிகழ்ச்சியாதலால், கா என்றதற் கேற்ப உண்டாக்குதல் என்னுந் தொழில் வருவிக்கப்பட்டது. கரை கண்ட என்பது ஒரு சொல்லின் தன்மையது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்