சித்திரைத் திங்கள் வெயிலெனவே – என்
சிந்தையைக் கலக்கிடச் செய்தவளே
நித்திரை உலகுக்கு அனுப்பாதே – என்
நிம்மதிக் கெடுத்து வாட்டாதே!
பத்தரை மாற்றுத் தங்கமெனப் – பல
பண்புகள் கொண்டு ஒளிர்ந்தவளே!
இத்தரை மீதினில் நான்வாட நீ
என்னை விட்டுச் சென்றதெங்கே?
உலவும் தென்றல் குளிரெனவே – என்
உள்ளச் சோலையில் பூத்தவளே!
இலவு காத்த கிளிபோல எனை
ஏங்க வைத்தே சென்ற தெங்கே?
பிரிவென் கின்ற புயற்கரத்தால் – உயர்
பாசச் சுடரை அணைத்துவிட்டுச்
சருகாய் என்றன் வாழ்வதனைத் – தரையில்
சரியச் செய்தே சென்றதெங்கே?
இதய மேடையின் இனியவளே – எனை
இணைத்து வாழ்ந்திட நினைத்தவளே!
உதய மலராய் சிரித்தவளே – நீ
ஓடி மறைந்தே சென்றதெங்கே?
சாதியின் கொடுமை தாளாமல் – துயர்
தணலில் நெஞ்சம் கொதித்திடவே
பாதியில் பிரிந்து வாடுகிறேன் – இந்தப்
பாவிக்குப் புகலிடம் தாராயோ?