பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். என்பது வள்ளுவர் வாக்கு.
ஹார்மோன் காரணமாக ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுபவர்கள் திருநங்கையர் எனப்படுகின்றனர். திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் “திருநம்பிகள்” (Transmen) என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர்.
திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
எல்லோரையும் போல ரத்தமும், சதையும் உள்ள மனிதர்கள்தான். பசி, தூக்கம், கருணை, காதல், காமம், தேடல், உழைப்பு, காயம், துக்கம்,பெருமிதம் என்ற எல்லா உணர்வுகளும் இவர்களுக்கும் உண்டு. இவர்களும் நம்மைப் போலவே ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான். சினிமா இவர்களை கண்டபடி சித்தரிப்பதும், பஸ்சில் அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு திருநங்கையின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் கூட உட்காராமல் கால் வலியோடு நின்று கொண்டே பயணிப்பதும் இன்றைய நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.
கல்வி நிறுவனங்களில் இவர்களுக்கென தனி ஒதுக்கீடு இல்லை. ஆஸ்பத்திரிகளில் தனி படுக்கையறை வசதிகள் இல்லை. ரெயில் நிலையங்கள் போன்ற பரபரப்பான பகுதிகளில் இவர்களுக்கென தனி கழிப்பறை வசதிகளை செய்துத்தரப்படுவதில்லை. சக மனிதர்களாக அனைத்து உரிமைகளையும் பெற்று, கண்ணியமான ஒரு வாழ்க்கை அவர்கள் வாழ வேண்டும்.
பாலியலுக்கும், பிச்சை எடுத்தலுக்கும் அவர்கள் தள்ளபடுவதன் காரணம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் என்றால் அது மிகையல்ல.கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும், படிக்கும் திருநங்கைகள் படிப்பிற்கும், அன்றாட செலவிற்கும் என்ன செய்வார்கள் என்று சற்று சிந்தியுங்கள்??
நான் தினமும் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது பல திருநங்கையரைப் பார்க்கிறேன். அவர்களிடம் பிச்சை எடுக்காமல் பிழைக்கலாமே என்றதற்கு வேலை கொடுத்தால் செய்யத் தயார், ஆனால் எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லையே என்றனர். அப்பொழுது எனக்கு சட்டென்று தோன்றியது.ஏன் அரசு இவர்களைத் தத்தெடுத்துக்கொள்ளக் கூடாது?. சாதாரண மனிதர்களைக் காட்டிலும் உடல் வலுவான திருநங்கைகளுக்கு நல்ல வேலை கொடுத்தால் அவர்களும் மற்றவர்கள் போல் உழைத்துச் சம்பாதிக்க முடியும். அவர்களிடம் உடல் வலுவும், மனதில் திடமும் நிறையவே உள்ளது.
தமிழகத்திலேயே முதன்முதலாக கரூர் மாவட்டத்தில் 29 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி அதில் 20 திருநங்கைகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு முதன்முதலாக கரூர் மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலைக்கழகம், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், திருநங்கையர் சார்ந்த கொள்கை திட்டங்களை அமல்படுத்த உள்ளது.திருநங்கையரை மூன்றாம் பாலினமாக குறிப்பிட வேண்டும் என, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டில்லி பல்கலைக்கழகம், முதுகலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில், மூன்றாம் பாலினம் என்ற பிரிவைச் சேர்த்துள்ளது. மேலும், பட்டப் படிப்பில் சேரும் திருநங்கையருக்கான கொள்கைகளையும் டில்லி பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. அதில், திருநங்கையருக்கான இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பது, அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்ப்பதா அல்லது வேறு பிரிவின் கீழ் கொண்டு வருவதா என்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு தீர்வு காணப்படும். மேலும், திருநங்கையருக்கு நிதியுதவி, தங்கும் விடுதி, கழிப்பறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்த கொள்கைகளும் உருவாக்கப்படும். மொத்தத்தில், இதர மாணவ, மாணவியருடன் இணைந்து, திருநங்கையரும் அச்சமின்றி, பாகுபாடற்ற கல்வி பயில்வதற்கான கொள்கைகளைப் பின்பற்ற, டில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இக்கொள்கை திட்டத்தை உருவாக்கும் பணி, சி.ஐ.சி.,என்ற அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அளிக்கும் பரிந்துரையைப் பின்பற்றி, வரும் கல்வியாண்டு முதல், திருநங்கையருக்கான கொள்கை திட்டத்தை அமல்படுத்த டில்லி பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு கடந்த ஆண்டு போட்டியிட்ட மது கின்னர் என்ற திருநங்கை, தன்னை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு எந்த பதவியையும், பொறுப்பையும், பணியையும் தங்களால் திறமையாக வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இந்த சமூகத்தினரிடம் காணப்படுகின்றது. திருநங்கை சமூகம் கேட்பது ஒன்றே ஒன்று தான், அவர்கள் சுயமரியாதையுடனும், சுயசார்புடனும் வாழ ஒரே ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் எந்த தவறுமில்லை என்றே கருதுகிறேன்.