சிறுவர் நலன்கள் காத்திடுவோம்
சிறந்து விளங்கச் செய்திடுவோம்
மலரும் அந்த மொட்டுகளின்
மகிமை அறிந்து வாழ்த்திடுவோம்!
சிறகை விரித்துப் பறக்கட்டும்
சின்னஞ் சிறிய சிட்டுக்கள்
இடையில் சிறகைச் சிதைக்காமல்
இருந்து காப்போம் நாம்அவரை!
மொட்டு மலர்ந்து விரிவதற்குள்
மூர்க்கர் பறித்து விடுகின்றார்
பட்டாம் பூச்சி பறப்பதற்குள்
வண்ணச் சிறகை நசிக்கின்றார்
கட்டாந் தரையில் முத்துகளை
கல்நெஞ் சர்கள் உடைக்கின்றார்
சிற்பி இந்தச் சிறுவர்களின்
சின்னஞ் சிறிய கரங்களினை
கட்டிப் போட்டு வதைக்கின்றார்
கயவர்.., ஐயோ. காத்திடுவோம்!
வளரும் சிறுவர் துன்பங்கள்
வன்முறை யாவும் ஒழித்திடுவோம்
தகாத செயல்கள் புரிகின்ற
தரங் கெட்டோரை அழித்திடுவோம்!