உன்னிடம்
கையை நீட்டுகிறேன்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறாய்..
போலிச் சிரிப்புகளின் மத்தியில்
உன் கோடிப் புன்னகைகள் தான்
என் சந்தோசங்கள் என்பதை
நீ அறிந்தே இருக்கிறாய்..

விதியை மாற்றும்
வரமொன்று கிடைத்தால்
உன் வாழ்வின் எழுத்துக்களை
அழகாய்த் திருத்தி
நட்சத்திரங்களைப் பரிசளித்திருப்பேன்…


இப்போதும் அதைத்தானே
செய்கிறேன் என்கிறாயா?
சின்னத் திருத்தம்
உன் பயிற்சிகளையும்
உன் குணங்களையும் தான்
என்னால் திருத்த முடிகிறது இப்போது..

பார்வைக் குறையென்கிறாய்
பக்குவமாய்ச் சொல்லித்தருகிறேன்.
கேட்கவில்லையென்கிறாய்
கேட்கும்படி வசதியளிக்கிறேன்.
திக்கித் திக்கிப் பேசுகின்றாய்
நானும் சிறுவயதில்
உன்னைப் போல் திக்குவாய் தான் என்று
பொய்யும் சொல்கிறேன்.

நடக்கச் சிரமப்படுகிறாய்
ஊன்றுகோலாய் வருகிறேன்.
உன் கைகள் பிடித்து
எழுதவும் உதவுகிறேன்.
இன்னும்
கற்பதில் சிரமமென்றாய்
கற்கண்டாய்ப் பலமுறைத் தூவினேன்
உன் உள்ளத்தில் கல்வியை..
கற்றவை ஞாபகமில்லை என்கிறாய்
பரவாயில்லை
நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்..
இவைகள் மட்டுமா
இன்னும் சொல்கிறேன் கேள்
என் அன்பு மகளே
சில பொழுது தாயாகவும்
சில பொழுது தந்தையாகவும்
சில பொழுது தோழியாகவும்
சில பொழுது தாதியாகவும்
உனக்காய் மாறுகிறேன்..

உற்று நோக்கினாய் என்னை
உள்ளத்தால்
அன்பு கொண்டேன் உன்னை..

மூர்க்கத்தனமாய்
அடிக்க வருகிறாய் என்னை
வாயில் வடியும் எச்சிலைத் துடைத்து
வாரியணைக்க வா என்கிறேன் உன்னை..

வா அருகில் வா என் செல்லமே!
வாழ்வதற்குக் கற்றுத் தருகிறேன்..
உயிரில் கலந்த ஒற்றை ரோஜாவே
உன் சாதனைகள் தான் என் கனவுகள்..

கற்கிறேன்
தினம் தினம் உன்னைக் கற்கிறேன்.
உனக்காகக் கற்கிறேன்.
என்றும் உன் இனிய
ஆசானாய் நான் ஆகிறேன் –
வா என்னை ஆரத் தழுவிக் கொள்ள….


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்