காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.
காடுகள் – நம்
உடலில் உயிராடைகள்
ஆனால்… நாம்
கிழித்துக்கொண்டு இருக்கிறோம்.
காடுகள் – நம்
வாழ்க்கைப் படகுகள்
அதிலே… நாம்
துளை போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
காடுகள்
பறவைகளின் வீடுகள்
நாம்
கலைத்துக் கொண்டிருக்கிறோம்.
காடுகள்
மரங்களின் மாநாடுகள்
நாம்
பயனின்றி கூடிக்கூடி
கலைந்து கொண்டிருக்கிறோம்.
காடுகள்
வாழ்க்கைப் புத்தகங்கள்
நாம்
படிக்க விரும்பாமல்
கிழித்துக்கொண்டு இருக்கிறோம்.
காடுகள்
பூ மாலைகள்
நாம்
குரங்குகளாக மாறி
பிய்த்துக் கொண்டிருக்கிறோம்.
காடுகள்
நம் தாய் தந்தைகள்
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
ஏதிலிகளாக திரிகிறோம்.
காடுகள்
நம் குழந்தைகள்
கொஞ்சி கொண்டாடாமல்
திண்டாடா விட்டுவிட்டோம்.
காடுகள்
நம் தோழன்கள்
தோள்கொடுத்து துணைநிற்காமல்
இரண்டகம் செய்து கொண்டிருக்கிறோம்.
காடுகள்
நம் தோழிகள்
நட்பு பாராட்டாமல்
சிதைத்து கொண்டிருக்கிறோம்.
காடுகள்
நம் உயிர் உறவுகள்
மறந்து தொலைத்து விட்டு
நடுத்தெருவில் நிற்கிறோம்.
காடுகள்
உயிர்களின் வாழ்விடம்
நாம்
அழித்துக் கொண்டிருக்கிறோம்.