விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.
கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே! கவின்மலரே!
அன்னத்தில் கைவைத்து
அனைவருக்கும் பகிர்ந்தாயோ?
உன்னிடத்தில் தளிர்க்கின்ற
உயர்வான அழகாலே
மன்னனுமே காத்திருப்பான்
மகாராணி ஆக்குதற்கே!
சடுதியிலே குளித்தபின்னும்
சடைப்பின்ன நேரமிலையோ?
அடுப்படியில் அனலிடையே
அழகுமலர் நீயிருக்க
படிப்படியாய் சமையலினைப்
பாங்காக நீமுடிப்பாய்,
நடிப்பதுபோல் செய்தாலும்
நளபாகம் உன்செயலே!
பார்வையிலே பொங்கலிட்டுப்
படைக்கின்றப் பேரழகே!
கோர்வையாய் வருகின்ற
கொஞ்சுதமிழ்ப் பாட்டிசைத்து
ஆர்வமுடன் அவனிக்கே
அருந்தமிழை நீயுரைப்பாய்.
கார்மேகக் கூந்தலிங்குக்
கவிபடிக்க மகிழ்ச்சிதானே!