உன் விழியில் விழுந்த நொடி
என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி
உன் ஒற்றைப் பார்வையில் மனம்
பித்தாகி நான் மயங்க
தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி
நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில்
தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது.
ஏழ்பிறப்பெடுத்து உனக்காக நானும்
ஏவல் செய்யவேத் தவிக்குதெந்தன் வயது.

என் காதில் நீ வந்து
உன் காதல் சொல்லச் சொல்ல
செவிகள் ரெண்டும் பூப்பூக்கும்
உயிருக்குள் ஏதோ ஒன்று தேன் வார்க்கும்
என் மோனத்தவம் கலைக்க மேனகையாய் வந்தவளே…
சேதாரமில்லாமலெனைச் சேர்த்தணைத்துக் கொள்ளடி!

உன் நேசப் பெருவெளியில் நெஞ்சம் நான் தொலைக்க
ஆழிப்பேரலையாயுன் நினைப்பு அலைக்கழித்துச் செல்லுதடி
உன் ஆழக்காதலெனை அணுஅணுவாய்க் கொல்லுதடி

ஞாயிற்றுத் தொகுதியிலே கோள்களெல்லாம் எனைச் சுற்ற
நானோ ஒற்றைச் சூரியனாய் உனை வலம் வருகின்றேன்.
பரந்த வானாய் நீயிருக்க
உன்னில் சிறகு விரித்தே பறந்து செல்கிறேன்.

சுற்றும் காற்றாய் அகிலமெங்கும் திரிந்தாலும்
உன்னில் வந்தே மையம் கொள்கிறேன்;

உயிரணுக்களில் நீ தானே பூக்கிறாய்
என்னுயிர் நூலிலே உன்னாயுள் கோர்க்கிறாய்
எண்ண அலைகளில் வந்து வந்து மோதியே
உன்னிடமேயெனைக் கரை சேர்க்கிறாய்

என் தேசங்களெல்லாம் உன் நேசங்கள் ஆள
கொலுவிருக்கிறாய் என்னில் கோபுரக் கலசமாய்
காதலின் தீபம் ஒன்று கண்களில் ஏந்திக்கொண்டு
காரிருள் நீக்க வந்த ஒளிச்சிற்பம் நீயடி
ஓருயிராகி ஒன்றிக் கலந்திடவே துடிப்பவன் நானடி

சந்திர ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை போலே
உன் காதலுண்டு வாழும் மோகப் பறவை நானே
உன் மடி கொடு நான் துயில
உன்னிடைகொடு நான் தழுவ

என் பிரபஞ்சம் முழுவதுமே உயிர்க்க வைப்பதுவும்
இயக்கி வைப்பதுவும் உன் பேரன்பு தானடி
என் கோபக்கனலைக் கூட காதல் அதிர்வலையாய்
மின்மாற்றிச் செல்லுது உன் நேசக்காதலடி

என்னுயிர் இழைகளில் காதல் நெய்து தடம் பதிக்கிறாய்
உயிர்க்கலங்களில் புத்துணர்வாகிக் குதிக்கிறாய்
செங்குருதியாயெ ந் தன் தேகமெங்கும் ஓடி
நாடி நரம்பெங்கும் நர்த்தனம் புரிகிறாய்

என்னிதயச் சுவரில் உயிரோவியமாய் உன் உருவே
என் அடி நெஞ்சில் நாதமாய் ஒலிப்பது உன் குரலே
அறுசுவையூட்டும் அற்புத விருந்தும் நீயடி
என் பிணி தீர்க்கும் அருமரு ந் தும் நீயடி

என் ஐம்புலன்கள் திறக்கும் அற்புத மந்திரமே
என் தேடல்களெல்லாம் நீயாகிப் போக
உள்ளுணர்வெங்கும் ஊடுருவும் உனை ரசிக்கிறேன் நானே

எனக்குள் ஆயிரம் பௌதீக மாற்றங்கள் நிகழ
நானாக நீயும், நீயாக நானும் போராடும் இக்களத்தில்
பொருதியே வெல்வோம் வாடி பெண்ணே…

உன்னோடு நான் வாழ ஒரு பிறவி போதாது
காற்றுள்ளவரை நானும் கலந்திருப்பேன் உன்னோடு
என்னுரிமை நீயாக, என்னுறவும் நீயாக
அன்பே நீயென்னை ஆட்கொள்ளும் நாள்வரை
என் காதல் மெய்ப்படக் காத்திருப்பேன் கண்மணி.


3 Comments

faizar sulthan · மே 1, 2020 at 20 h 06 min

ஓர் ஆணின் மனதில் காதல் புரையோடிய வரிகள்.
படிக்கும் போதே வாசகனை எங்கோ இழுத்துச் செல்லக் கூடிய அட்டகாசக் கவிதை..
மிக மிக அருமை..நல் வாழ்த்துக்கள்

Wafeera wafi · மே 3, 2020 at 19 h 21 min

Manadhiniya nandrihal!

Rasi · மே 6, 2020 at 13 h 45 min

சிறப்பு வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »

புதுக் கவிதை

வாழ்க மகளீரே

குடும்பத்தின் குலமகளே
கதம்பத்தின் திருமகளே
பெண்ணியத்தின் நிறமகளே
கண்ணியத்தின் நிறைமகளே
தாய்மையின் கருமகளே
வாய்மையின் உருமகளே
பெண்மையின் பெருமகளே
தண்மையின் உறைமகளே
குழந்தையின் கருமகளே
சலங்கையின் ஒலிமகளே
கணவனின் மெய்மகளே
கருத்தினில் மறைமகளே
விழிகளின் கயல்மகளே
விருந்துகளின் சுவைமகளே
விம்பத்தின் நிலமகளே
விருட்சத்தில் நிழல்மகளே
உலகத்தின் மென்மலரே
உயிர்களின் மூச்சிவளே
வாழ்க வாழ்க மகளீரே
வாழ்த்துகின்றேன் மனங்குளிர…  » Read more about: வாழ்க மகளீரே  »