தொடர் 16
இதுவரை
வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை)
ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது)
இரண்டையும் பார்த்துவிட்டோம்.
ஏன் இவற்றைப் படிக்க வேண்டும்.
ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர்
பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம்.
இப்போது பாருங்கள்.
மா முன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர்
இவை வெண்பாவுக்குரிய தளைகள்.
நேர் முன் நேர்
நிரை முன் நிரை
இவை நேரொன்றிய மற்றும் நிரையொன்றிய ஆசிரியத்தளைகள்.
இவற்றிற்கெதிரான ஒன்றாத ஆசிரியத்தளைகள்.
இவை ஆசிரியப்பாவுக்குரியன
காய்ச்சீர்கள் முன்பு நேர்வரக்கண்டோம்
காய் முன் நிரை வந்தால்
அது எங்கே வரும்
கலித்தளைகளில் வரும்
கலைவாழ களிசேர
நிலைமாறா நிலைகூட
இவற்றைப் பாருங்கள்
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
காய் முன் நிரை வந்ததால் இவை கலித்தளை ஆயின
கலித்தளை பயின்று வரும் பா கலிப்பா எனப்படும்
நாம் பார்த்த சீர்களில் மீதம் உள்ள சீர்கள் எவை எனப் பாருங்கள்
ஆம்
கனிச்சீர்கள்
இவை எங்கு வரும் எனப் பார்ப்போம்
வஞ்சித்தளையில் வரும்
கனிமுன் நேர்
கனிமுன் நிரை
முதலாவது ஒன்றாத வஞ்சித்தளை
இரண்டாவது ஒன்றிய வஞ்சித்தளை
நீவாழவும் நான்வாழவும்
ஓர்தாய்மொழி தேன்தமிழ்மொழி
நேர்நேர்நிரை- நேர்நேர்நிரை
நேர்நேர்நிரை- நேர்நிரைநிரை
இங்கு அனைத்தும் நிரை ( கனி) முன் நேர் வந்துள்ளதைக் கவனியுங்கள்
இது ஒன்றாத வஞ்சித்தளை
இதனையும் பாருங்கள்
கலைவாழவும் களிசேரவும்
நிலைமாறிடா நிலைகூடவும்
இவை கனிமுன் நிரை
ஒன்றிய வஞ்சித்தளை
இதுவரை நான்கு தளைகளைப் பார்த்துள்ளோம் பெரும்பாலான கவிதைகளுக்கு இவையே போதும்
மற்ற தளைகளைத் தேவைப்படும் போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மீள்பார்வை
அன்பும் அறனும் – நேர்நேர் – நிரைநேர்
மா முன் நிரை
இயற்சீர் வெண்டளை ( வெண்பா)
கசடற கற்றபின்
நிரைநிரை- நேர்நிரை
விளமுன் நேர்
இயற்சீர் வெண்டளை ( வெண்பா)
உடைத்தாயின் இல்வாழ்க்கை
நிரைநேர்நேர்- நேர்நேர்நேர்
காய்முன் நேர்
வெண்சீர் வெண்டளை ( வெண்பா)
யாதும் ஊரே – நேர்நேர்- நேர்நேர்
நேர்முன்நேர்
நேரொன்றிய ஆசிரியத்தளை (ஆசிரியப்பா)
துயர்தரும் பிணியதோ
நிரைநிரை- நிரைநிரை
நிரை முன் நிரை
நிரைன்றிய ஆசிரியத்தளை(ஆசிரியப்பா)
யாவரும் கேளிர் – நேர்நிரை – நேர்நேர்
நிரை முன் நேர்
ஒன்றாத ஆசிரியத்தளை (ஆசிரியப்பா)
ஒருபோதும் மறவாத உளம்வேண்டுமே
உனைநானும் இழக்காத வரம்வேண்டுமே
ஒருபோதும்- மறவாத
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
காய் முன் நிரை – கலித்தளை ( கலிப்பா)
உனைநானும்- இழக்காத
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
காய் முன் நிரை – கலித்தளை ( கலிப்பா)
மறவாத உளம்வேண்டுமே
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
காய் முன் நிரை – கலித்தளை ( கலிப்பா)
இழக்காத வரம்வேண்டுமே
நிரைநேர்நேர்- நிரைநேர்நேர்
காய் முன் நிரை – கலித்தளை ( கலிப்பா)
புவிமீதினில் நிலையாயிரு புவிவேண்டிடும் தருவாயிரு
கவிபாடிடும் தமிழாயிரு கலையாவிலும் அழகாயிரு
புவிமீதினில் நிலையாயிரு
நிரைநேர்நிரை- நிரைநேர்நிரை
புளிமாங்கனி – புளிமாங்கனி
கனிமுன்நிரை – வஞ்சித்தளை( வஞ்சிப்பா)
புவிவேண்டிடும் தருவாயிரு
நிரைநேர்நிரை- நிரைநேர்நிரை
புளிமாங்கனி – புளிமாங்கனி
கனிமுன்நிரை – வஞ்சித்தளை( வஞ்சிப்பா)
மேலேயுள்ள இரண்டும் ஒன்றிய வஞ்சித்தளை
கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் படியுங்கள்
அன்பாயிரு அழகாயிரு அருள்மேவிடும் இறையாயிரு
பண்போடிரு பணிவோடிரு பழியோடுநீ பழகாதிரு
கண்மாறினும் கலங்காதிரு களிப்பானவோர் உறவாயிரு
மண்மாறினும் மயங்காதிரு மனந்துளைத்திடும் விதையாயிரு
இப்பாடலில்
இறையாயிரு- பண்போடிரு
பழகாதிரு- கண்மாறினும்
உறவாயிரு- மண்மாறினும்
இவற்றைக்கவனியுங்கள்
அனைத்தும் புளிமாங்கனி- கூவிளங்காய்
நிரைநேர்நிரை- நேர்நிரைநேர்
நிரைமுன் அதாவது கனி முன் நேர் வந்துள்ளதால் இவை ஒன்றாத வஞ்சித்தளையாகும்
அசை
சீர்
தளை
இவற்றைப் பார்த்த நாம் இனி பாவகைகளையும் பார்ப்போம்.