11

‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள்.

சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல, பெட்டிக்குள் நகரும் சத்தம் கேட்க… துதிக்கை மட்டும் முட்டையின் வெளிப்புறமாக வந்து சுவாசிக்க… சற்று குழப்பத்துடனே இதுவும் யாளியாகத்தான் இருக்குமோ..? என்று நினைத்து, குழப்பத்துடனே தூங்கினாள்.

மறுநாள், பள்ளி சென்று திரும்பி வந்து பார்த்தால்..? வியப்பாக இருக்கிறது. ஆம்..! பெட்டி உடைந்து கிடக்கின்றது. உள்ளே இருந்த கஜயாளியை காணவில்லை…

கட்டிலின் கீழே, அலமாரிகள் என்று, எங்கு தேடியும் கிடைக்கவில்லை…

வீட்டின் முன்பு, ஆசை, ஆசையாய் வளர்த்து வைத்திருந்த கருந்துளசிச் செடியும், புதினாக்கீரைச் செடியும் இல்லை…

சூழ்நிலையை உணர்ந்து கொண்ட சக்தி, கடுங்கோபத்துடன் பின்புறம் இருந்த பொதிகை மலைக்கு சென்றாள்.

மகர யாளியின் முதுகில், கஜ யாளி சறுக்கு விளையாடுவதை கண்டதும்… சக்திக்கு, கோபம் எங்கு சென்றது என்றே, தெரியவில்லை…

சக்தியை கண்டதும், மகரயாளி முன்னங் கால்களை தரையில் சமநிலையில் வைத்து, தனது அன்பை வெளிப்படுத்தியது…

கஜயாளி தாவிச் சென்று, குட்டித் துதிக்கையால் சக்தியின் கால்களை பிடித்துக் கொண்டது…

‘ஆமா..? ஏன் உடம்பு முழுக்க ரத்தமாக இருக்கிறது என்று, நேற்றே கேட்டேன். நீ, செல்லவே இல்லை…’ என்றாள்.

‘ஓ… இதுவா..? ஒரு சிறுத்தைப்புலி எனை தாக்க வந்தது, அதனை கொம்புகளால் குத்தினேன், சிறுத்தையின் ரத்தம் என் மீது தெறித்தது… அது.தான்..! இது…’

‘ஆ..? அப்படியா..? சிறுத்தைப்புலியை கூட, ஜெயித்து விடுவாயா..?’

‘ம்..,ம்…என்றது…’ மகரயாளி.

‘கஜயாளி எப்படி..? உன் இருப்பிடத்தை கண்டறிந்தது.’ என்று கேட்க…

‘எங்களது யாளிகள் இனம், மனிதர்களை விட, அதிக நினைவாற்றல் கொண்டிருந்தோம். எங்களது வழித்தோன்றல்கள் பத்து, பதினைந்து தலைமுறை கடந்தும் கூட, அவர்களின் செயல்பாடுகள், நகர்வுகள், தேடல்கள், இவையெல்லாம் எங்களது நினைவுகளில் அழியாது தொடர்வது, எங்களது இனத்திற்கு கிடைத்த சிறப்பு இயல்பு…

மேலும், நிலவாழ் முதுகெலும்பு உயிர்களில் அதீத பலம் பொருந்திய விலங்குகள் எங்களது இனம். எங்களது இனத்திற்கு இருந்த மிகப்பெரிய குறை என்றால், கூச்ச சுபாவம் ஒன்று மட்டுமே..!’

‘இப்படி, பலம் பொருந்திய உங்களது இனத்தை, ஆதிசிவனார் எப்படி..? அடிமையாக்கினார்.’

‘தென்மதுரை நகரை நிர்மாணித்த ஆரம்ப காலத்தில், எங்களது மேரு மலையின் கிழக்குப் பகுதியை மனித குலத்தினர் ஆக்கிரமிக்கத் துவங்கியதும், நாங்கள் மேரு மலையின் மேற்குப் பகுதியில், இடம்பெயர்ந்து வாழ்ந்தோம்..!

வேட்டையாடும் நோக்கில், எங்கள் மீது, யார் தாக்குதல் நடத்தினாலும், நாங்களும் பதிலுக்கு, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துவோம்.

எங்களது பகுதிகளில், சில முனிவர்கள் தவம் செய்வார்கள், சில சித்தர்கள் மூலிகை தேடி, சுற்றித்திரிந்து அலைவார்கள். யாரையும், நாங்கள் இடையூறு செய்ததில்லை… அவர்களும், எங்களுக்கு இடையூறு செய்வதில்லை…

இப்படி இருந்த நிலையில்… எங்களது உடல் வலிமைக்கு தேவையான முக்கிய உணவுகள் குறையத் துவங்கியது, எங்களது இனமும் சிறிது சிறிதாக எண்ணிக்கை குறையத் துவங்கியது.

பல வருடங்களாக மேரு மலையின் உச்சியில் தனிக்குன்று ஒன்றில் கடும் தவத்தில் இருந்த, ஆதிசிவனின் காலடியில் நாங்கள் அதிகமாக விரும்பி உண்ணும் நவபாஷாணம் நிறைந்து இருக்க… தவத்தினை முடித்து, ஆதிசிவன் கண்விழித்துப் பார்த்தார்.

சுற்றிலும் எங்களது யாளிகள் இனம், கூட்டம் கூட்டமாக இருக்க… சில யாளிகள் இறந்தும், சில யாளிகள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தன…

எங்கள் நிலை கண்டு, ஆதிசிவன் மனம் வருந்தி நின்றார்.

மீண்டும், உங்கள் இனத்திற்கு பாதகமாக இருக்கும், இவ்விடத்திற்கு வருவதில்லை என்று, வாக்கு அருளிச் சென்றார்.

அவரது இந்தச் செயலுக்காகவே, எங்களது இனம் அவருக்கு நன்றிக்கடனாக, ‘எங்களது யாளிகள் இனத்தின், கடைசி யாளி இருக்கும் வரை… தங்களுக்காக எங்களது நற்பணிகள் தொடரும் என்று வாக்கு தந்தோம்..!’

ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..