7
‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி…
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர். பேருந்தும் புறப்பட்டது.
சக்தி, இரண்டு முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக கையில் இறுக்கமாக மடியில் வைத்து பிடித்தபடியே இருந்தாள்.
முட்டைகள் உடைந்துவிடுமோ..? என்ற பயத்தில், ஊருக்கு சென்று சேரும் வரை… சக்திக்கு, தூக்கமே வரவில்லை.
வீட்டிற்கு வந்து சேர, இரவு ஒன்பதரை மணி ஆனது.
‘அப்பா, வாங்க… வாங்க… நல்லா இருக்குறீங்களா..? அம்மா நல்லா இருக்குறாங்களா..? சக்தி, சேட்டை பண்ணாமல், அடக்கம், ஒடுக்கமா இருந்தாளா..?
வாங்க.ப்பா, கை கால் அலம்பி வாங்க… சாப்பாடு, எடுத்து வைக்கிறேன்…’
சக்தி, தனக்கு இருந்த, தனி அறையில் சென்று, முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.
‘அம்மா..! சக்தி… சக்தி… எங்க போனா..? கை, கால் கழுவிட்டு வா..! அம்மா, சாப்பாடு வைக்கிறேன்…’
ம், சரி.மா..! வந்துட்டேன்…
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, நிறைவாக சாப்பிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு, எல்லோரும் தூங்கச் சென்றனர்.
சக்தி, இரண்டு முட்டைகள் இருந்த பெட்டியை, நெஞ்சோடு அணைத்தபடியே தூங்கினாள்.
சில நாட்களில்… தாத்தாவும், ஊருக்கு கிளம்பினார்.
சக்தி, பெட்டியை அணைத்தபடியே தூங்குவது, வழக்கமாகிவிட்டது.
ஓர் நாள்… சக்தியின் உடல் சூட்டினால், பொட்டிக்குள் சிறிதாக நகர்வது போன்று, சிறு முனங்கல் சத்தம் கேட்க…
பெட்டியை திறந்து பார்த்தால்..? ஆச்சரியமாக இருந்தது…
ஆம்..! ஒரு முட்டை உடைந்து, பார்ப்பதற்கு, கடற்குதிரை போல… தலையை மட்டும் நீட்டிக்கொண்டு, ஓர் உயிர் வெளியில் வர, எட்டிப் பார்ப்பதை கண்டாள்.
சக்திக்கு, ஒரு புறம் அளவு கடந்த மகிழ்ச்சி..! கூடவே, கொஞ்சம் பயமும் தொற்றிக்கொள்ள… பெட்டியை மூடிக்கொண்டாள்.
சக்திக்கு, தூக்கமே வரவில்லை. சிறிது நேரம் கழித்து, ஆவலோடு பெட்டியை திறக்க, அந்த உயிர் நாக்கை நீட்டி, நீட்டி… கண்களை திறக்க முயற்சிக்கவும்…
சக்தி முகம் சோகமாக பார்த்து, தனது கைவிரல்களை நீட்டியதும், விரல்களை அவ்வுயிர் நாக்கினால் நக்கியதும், சக்திக்குள் ஒரு புதுவித தாய்மை ஆனந்தம்…
விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது.