5
ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..!
சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த, முட்டை வடிவத்தில் இருந்த பொருளை எடுக்க…
உடனே..! புருவம் உயர்த்தி, வாய் பிளந்து, ஆச்சரியமாக பார்த்தாள்.
ஆம்..! அந்த பொருளின் எடை குறைந்து இருந்தது. அவளுக்கு, நம்ப முடியவில்லை. இரண்டு, மூன்று முறை, உள்ளங்கையை மேலே – கீழே, உயர்த்தி, தாழ்த்தி எடையை அனுமானம் செய்கின்றாள்.
பின்னர், காதுக்கு அருகில் வைத்து, குலுக்கி குலுக்கிப் பார்க்கின்றாள். ஏதோ..? உள்ளுக்குள் முட்டை போல, குலுங்குகின்றது. மேலும், ஆர்வம் அதிகரிக்க… அதிகரிக்க…
காதில் ஒட்டி வைத்து, கண்களை இதமாக மூடி, உற்று நோக்குகின்றாள். காதில் பட்டதும், குளுமையாகவும்… அதோடு, மூச்சு இழுக்கும் அதிர்வலைகளும் கேட்க. இது ஒரு “முட்டை” தான்..! என்ற, தீர்மானத்திற்கு வருகின்றாள் சக்தி.
தலையாட்டி பொம்மையினை அருகில் கிடத்தி விட்டு, இரு உள்ளங்கைகளிலும் வைத்து மூடியபடியே, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்கின்றாள்.
குளுமை கொஞ்சம் கொஞ்சமாக சக்தியின் கைச்சூட்டில் குறைய ஆரம்பித்தது…
அதிகாலையில் கண் விழித்த சக்தி, அம்மா கொடுத்தனுப்பிய நகைப் பெட்டிக்குள், பழைய தலையணையில் இருந்து, இலவம் பஞ்சினை எடுத்து வைத்து, அதன் மத்தியில் முட்டையை பத்திரமாக வைத்துக்கொண்டாள்.
காலையில் சக்தியை தயாராக்கி, கன்னத்தில் முத்தமிட்டு, ‘ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், மறக்காமல் பாட்டிக்கு ஃபோன் பண்ணனும்’ என்று சொல்லி, தாத்தாவோடு வழியனுப்பினார் பாட்டி.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில், மதுரை… மதுரை… மதுரை… திருநெல்வேலி… திருநெல்வேலி… திருநெல்வேலி… என்று, குரல்கள் கேட்க.
திருநெல்வேலி… திருநெல்வேலி… என்று, கூறிய திசையை நோக்கி, தாத்தா நடந்தார்.
தாத்தாவின் கைகளை பிடித்து இழுத்தபடி… ‘தாத்தா..! தாத்தா..! மதுரைக்கு போய், மீனாட்சியம்மன் கோயிலைப் பார்த்துவிட்டுப் போகலாம்..!’ என்றதும்…
‘ம்…. சரி..! சரி..!’ என்று, இருவரும் மதுரை பேருந்தினுள் ஏறிக்கொண்டனர்.
பேருந்து நகர்ந்த சிறிது நேரத்திலே, தாத்தாவின் கண்கள் அயர்ந்திட…
சக்தி, மடியில் இருந்த பையில் இருந்து, நகைப் பெட்டியை மெதுவாக எடுத்து… எடுத்து.., அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டாள்.
பேருந்து, விரைவாக நகர…நகர… சன்னலில் வரும் இதமான காற்றும், தாலாட்டுப் பாடுவது போல இருக்க, அப்படியே தூங்கிவிட்டாள்…
இதுவரையில் பார்த்திராத, அடர்த்தி மிகுந்த நீளமான முடிகளையும், கோரைப் பற்களுடனும், நீளமான நாக்கும் கொண்ட, மிருகம் ஒன்று… தன், சிறிய முன்னங் கால்களால் வணங்கியதும், பயமும், பதற்றமும் மனதில் தீயாய் பற்றிக்கொள்ள…
பயப்படாதே..! சக்தி… நான், உன் குழந்தை தான்..! என்றதும்…
சுளீர்…! என்று, நீண்ட விசில் சத்தமும், அதோடு சேர்ந்தார்போல,
‘மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள்.