தொடர் 11

மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.

இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.

பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை

பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்

இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள். அனைத்தும் ஒன்றாகவே இருக்கும்.

பா / டகன் / பா – தனி நெடில் – நேர்
டகன் – இருகுறில் + ஒற்று – நிரை

கூ / விடும்
மா / தவம்
கூ / விளம்

இவை யாவும் நேர் நிரை தான்

கால்வழி
கார்முகில்
பார்வதி
பன்முகம்
கைவளை
தண்மலர்
வன்முறை

இவைகளும் நேர் நிரைதான்

இதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எனப் பார்ப்போம்

 1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
 2. குறில் + நெடிலுடன் தொடங்காது
 3. நெடிலில் தொடங்கும்
 4. நெடில் + குறிலாக வரும்
 5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
 6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்
 7. நெடில் ஒற்று இருகுறில்
 8. குறில் ஒற்று இருகுறில்
 9. நெடில் ஒற்று குறில்நெடில்
 10. குறில் ஒற்று குறில் நெடில்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

குருவி ×
படாத ×
பாடுது √ பா / டுது
பார்வையில் √ பார். / வையில் நேர் நிரை
பண்படு √ பண் / படு நேர் நிரை
நாட்டினீர் √ நாட் / டினீர்
குத்தினீர் √ குத்/தினீர்

அடுத்து கருவிளம்

பெயர் : கருவிளம்
வாய்பாடு : நிரை நிரை

கருமலை
கருவிழி
இருமலர்
விழிமலர்
தொழிலகம்
எழிலகம்
எழில்மலர்
தொழில்வழி
நறுமுகை
நறுந்தமிழ்

களேபரம்
உலாவரும்
ஒரேநிலா
ஒரேகதிர்
பராபரம்

இவைகளை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்.

உச்சரிப்பிலேயே கருவிளம் தெரியும்.

கரு / மலை நிரை நிரை
உரு / ளுது நிரை நிரை

இதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எனப் பார்ப்போம்…

 1. இது இரண்டு குறில்களால் தொடங்கும்
 2. குறில் + நெடிலுடன் தொடங்கும்
 3. நெடிலில் தொடங்காது
 4. நெடில் + குறிலாக வராது
 5. நெடில் + மெய்யெழுத்துடன் வராது
 6. குறில் + மெய்யெழுத்துடன் வராது
 7. இருகுறில் இரு குறில்
 8. இருகுறில் ஒற்று இருகுறில் ஒற்று
 9. குறில்நெடில் குறில்நெடில்
 10. கு நெ ஒற்று கு நெ ஒற்று

இரு / மலர் நிரை நிரை
விழி / எழில் நிரை நிரை
வராதவர் – வரா/தவர் நிரை நிரை
தராதவர் – தரா/தவர் நிரை நிரை

கணீர் கணீர் கணீர் / கணீர் நிரை நிரை

கல கல
பளபள
சடுகுடு
கலக்கலாய்
விளக்கமே
இவை யாவும் கருவிளங்களே

இப்போது நான்கு ஈரசைச் சீர்களையும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இப்போது கீழ்க்காணும் கவிதைகளைப் பாருங்கள்.

 1. தேமா மட்டும்

தேவ சேனா சேனை நீயே
தெய்வ நாதச் சேவல் நீயே
பாவ மூட்டைச் சேற்றை நீக்கும்
பக்கு வத்தை தந்தாய் நீயே
காவ லாக வந்து நிற்கும்
கந்த தேவன் கால டிக்கே
ஏவ லாக வாழ்ந்து நானும்
என்றும் சேவை ஆற்று வேனே

 1. புளிமா மட்டும்

முனிவர் வணங்கி மகிழும் தலைவ!
முருக வருக அருளைத் தருக
கனியாய்க் கனிந்து சுவையைத் தருக
கலையாய்த் தமிழை வளர்க்க வருக
தனிப்பே ரரசே தணிகை மலையே
தணிந்து வருக தமிழர்த் தலைவா
பனிவாழ் மலையன் மகனே வருக
பணிந்தே தொழுவேன் பரிசே தருக

 1. கூவிளம் மட்டும்

வேலவா வேல்விழி வள்ளியின் நாயகா
வெற்றியை நல்கிடும் நாதனே போற்றுவேன்
பாலகா பைந்தமிழ்க் காதலா நாதனே
பாழ்வினை நீங்கவே நானுனைப் போற்றுவேன்
கோலமாப் பேரெழில் நாயகா வீரனே
கோமகா கொற்றவை மாமகா போற்றுவேன்
ஆலமர் வேந்தனின் சீர்நுதல் தோன்றிய
ஐங்கரன் தம்பியே அன்பனே போற்றுவேன்

 1. கருவிளம் மட்டும்

பழமென விளங்கிடும் பலம்நிறை மகனவன்
பழனியில் அருள்தரும் பழந்தமிழ் மறையவன்
கிழமென கிழங்கிடம் கிளர்ந்தநல் அருள்மகன்
கிழக்கினில் உதித்திடும் சிவந்தநற் கதிரவன்
அழகினிற் சிறந்தவன் அறிவினில் முதிர்ந்தவன்
அருமறை பரவிய சரவணப் பெருமகன்
குழலினும் இனியநற் குரலினைத் தருபவன்
குகனவன் திருவடிப் பணிந்துநாம் உயர்வமே!

தாங்களும் இதுபோல் முயன்று எழுதிப் பயிற்சி பெறலாமே…

அடுத்து மூவசைச்சீர்களைப் பார்ப்போம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ