வணக்கம் நண்பர்களே
நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான்.
இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும்.
இப்போது எதுகை என்றால் என்ன என்று பார்ப்போம்
எதுகை
இது கவிதைக்கு அழகூட்டும் ஒரு அமைப்பு.
இது இல்லாமலும் கவிதைகள் எழுதலாம் தவறில்லை
இது இருந்தால் கவிதை மேலும் அழகு பெறும்
எழுதும் கவிஞரின் சொல் வளம் கூடும்
இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்
பத்தரை
சித்திரை
முத்திரை
நித்திரை
இவற்றில் இரண்டாவது எழுத்து’ த் ‘ என வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும்
மேலும் சில எடுத்துக்காட்டுகள்
கண்டு
உண்டு
மண்டு
வண்டு
கனவு
நனவு
சினம்
மனம்
கண்ணீர்
தண்ணீர்
மண்ணுலகம்
விண்ணுலகம்
இவை அனைத்திலும் இரண்டாவது எழுத்துகள் ஒன்றாக இருப்பதைக் காணுங்கள்; இதுவே எதுகை
எதுகையிலும் எட்டு வகைகள் உண்டு
அவையாவன
- அடி எதுகை
- இணை எதுகை
- பொழிப்பு எதுகை
- ஒருஉ எதுகை
- கூழை எதுகை
- மேற்கதுவாய் எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
- முற்றெதுகை
- அடி எதுகை
பெயருக்குத்தகுந்தாற் போல் ஒரு பாடலின் அனைத்து அடிகளிலும் ஒரே எதுகை அல்லது அடுத்தடுத்த இரண்டு அடிகளில் ஒரே எதுகை பெற்று வருவது அடிஎதுகை எனப்படும்
எடுத்துக்காட்டு
ஆயர் குலக்கொழுந்தே அப்பா பசுக்களை
மேய விடவழைத்த மேன்மையே – நாயக
ஆய கலைகள் அறிந்தவா அண்ணலே
தாயவள் போற்றும் தரம்.
இப்பாடலில்
ஆயர்
மேய
ஆய
தாயவள்
என்று 4 அடிகளிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி வந்ததால் அடிஎதுகை ஆயிற்று.
- இணை எதுகை
ஒரு அடியின் முதல் இரண்டு சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தால் அது இணை எதுகை எனப்படும்
எடுத்துக்காட்டு
அன்னை என்றும் தெய்வம் ஆவாள்
இன்பம் என்றும் அவளே ஈவாள்
தன்னை என்றும் தேய்த்துச் சிறப்பாள்
நன்மை என்றும் நமக்குத் தருவாள்
இப்பாடலில்
அன்னை என்றும்
இன்பம் என்றும்
தன்னை என்றும்
நன்மை என்றும்
என ஒவ்வொரு இரண்டு சீர்களிலும் இரண்டாவது எழுத்தான ‘ ன்’ வந்துள்ளதைப் பாருங்கள்; இதுவே இணைஎதுகை.