தொடர் 54
தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர்.
அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம்.
விட்டிலின் சிறகு எழுதியது
ஒளியின் ஸ்பரிசமே
மரணம்.
அனைவரும் அறிந்த விசயந்தான். விட்டிலானது விளக்கினில் விழுந்து மாய்ந்து போகுமென்பது. தெரிந்த தகவலொன்றை ஹைக்கூவில சொல்லி நகர்கிறார்கள் எனில் அங்கு பூடகமாக வேறொன்றைச் சொல்ல வருகிறார்கள் என்பது பொருள், என்றுமே ’’ பட்டு உணர்ந்தவனே ’’ பாதையை தெளிவாய்க் காட்டுவான். அங்ஙனமே, விட்டிலின் சிறகு இங்கு சொல்கிறது. ஒளியின் ஸ்பரிசமே மரணமென்று..
உண்மையில் ஒளியானது மரணத்திற்கு வழி வகுக்குமா..? இல்லை.. ஒளியானது நமக்கான விடிவு., ஒளியின் ஈர்ப்பில் விழுந்து மடிகிறோம் நாம். அந்த ஒளியே நம்மை பிரபஞ்ச இருளிலிருந்து விடுவித்து வெளியேற்றிக் கொண்டு போகிறது.
நம்மை ஈர்த்திடும் விசயங்களில் முன்யோசனை எதுவுமின்றி ஆபத்தைக் கூட உணராமல் ஈடுபட்டு தோல்வியை அல்லது துன்பத்தை தழுவுகிறோம்.
ஒளியென்பதும் நம்மை ஈர்க்கும் ஒருவகைத் துன்பமே ஒருவகையில்..
ஆனால் அதையே வாழ்விற்கான பெருவழியான ஞானமாக சிந்தித்தோமெனில், ஞானத்தை அடைய பல இன்னல்களை சந்திக்கத்தான் நேரும். விட்டில் பூச்சிக்கு ஒளியே மோட்சத்தை தருகிறது, அது தன்னை வருத்தி, மெய் விலக்க உன்னதம் அடைகிறது எனவும் கொள்ளலாம்.
ஹைக்கூ என்றுமே ஆழ்ந்த தேடலின் வெளிப்பாடென்பதை மறந்து விடக் கூடாது.
இதை கவனியுங்கள்..
பயம்
ஊர்ந்து கொண்டுதானிருக்கும்
இது பாம்பு போன தடம்.
பாம்பு கடந்து போய் பலமணி நேரமாகியிருக்கலாம். பல நாட்களாகி கூட இருக்கலாம். ஆனால் அது ஊர்ந்து நகர்ந்த இடத்தை கண்ணுறும் பொழுதெல்லாம், பாம்பு ஊர்வதைப் போன்றதொரு பிரமை நம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதை மாற்ற முடியாது. ஹைக்கூ கவிதையும் நீங்கள் படித்து முடித்து பலமணி நேரமாயினும் உங்களை தொடர்ந்து இம்சித்துக் கொண்டு, உங்கள் மனதில் வலம் வந்து கொண்டுதானிருக்கும்.
அவரது சென்ரியு ஒன்றை கவனியுங்கள்..
கடவுள்
கடைசி ஆசையைச் சொன்னார்.
பூசாரியாக பிறக்க வேண்டும்.
நிதமும் கைங்கர்யம் செய்யும் தொண்டனது நிலையை நினைத்து வருந்தியா இதை சொல்லியிருப்பார் கடவுள். இல்லை, தன்னை விட சுகபோக வாழ்வில் திளைத்து மகிழும் பூசாரியின் வாழ்வு தன் நிலைக்கு மேலானது என கடவுள் எண்ணி சொல்லியிருக்கலாம்.
ஹைக்கூ வாசிக்க, வாசிக்க நமக்குள் பலவித உள்ளக் கிளர்ச்சிகளை உருவாக்கி மறைபவை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை நமக்கு சொல்லி நகரும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு.