தொடர் – 50
ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக.. “நீங்கள் எங்கே செல்ல வேண்டும்..அதை சொல்லுங்கள் .” என்றாராம்.
உண்மை தானே.. நமக்கு எது தேவையோ அதை நாம் கேட்பதில்லை..
தேவையில்லாத பலவற்றைக் கேட்டு நம் நேரத்தையும்..காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருப்போம்..
நமது இலக்கு இதுவென தெளிவாய் தெரிந்தால் மட்டுமே ..நம்மால் அதில் வெற்றியை எளிதில் அடைய இயலும்.
ஹைக்கூ எழுத வேண்டும் என மனதினில் எண்ணம் கொண்ட பலரும்..மேலோட்டமாக அது மூன்று வரி கவிதை என்றுதான் எண்ணம் கொள்கிறார்களே தவிர..அதன் பலத்தரப்பட்ட விதிமுறைகளை அறிந்து கொள்ள விரும்புவதில்லை அல்லது ஆர்வம் காட்டுவதில்லை..இதை ஏன் சொல்கிறேன் என்றால் விதிகளை ஓரளவேனும் அறிந்தவர்களது கவிதைகள் ஹைக்கூ வடிவின் எல்லையை ஓரளவு தொட்டு நிற்கும்..ஆனால் பலரது கவிதைகளோ ஹைக்கூ விதிமுறைப்படி அமைவதே இல்லை.. அதை தெரிந்து எழுதுவோம் என்றும் பலர் முயற்சிப்பதும் இல்லை..ஏனெனில் பல போட்டிகளில் நான் இதை உணர்கிறேன்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கூற்று… எளிமையாய் மூன்றடியில் எழுதப்பட வேண்டும்..முதலிரண்டு அடிகள் ஒரு கூறு..ஈற்றடி ஒரு கூறு.. அந்த ஈற்றடியானது ஆற்றல் மிக்க பெயர்ச்சொல்லுடன் வாசகன் எதிர்பாரா திருப்பமுடன் இருந்தால் நல்லது. ஹைக்கூ தந்திமொழி போல அமைத்தால் நல்லது.. என்றார்.
இன்னும் சற்றே விரிவாக கவிஞர்.நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வு நூலில்..பலரது ஹைக்கூ வடிவங்களை ஆய்வு செய்து..விதிமுறைகளென தந்தவை இது..
- மூன்று வரியில் அமைதல்
- கற்பனை, உவமை,உருவகம் இருத்தல் கூடாது
- உணர்ச்சிகளை நேரடியாக வெளிப் படுத்தாது
- தன்மைப் பாங்கினை தவிர்க்கும்.
- ஒரு சொல் மட்டும் குறியீடாய் பயின்று வருதல் கூடாது
- இருண்மையை மேற்கொள்ளுதல் கூடாது
- கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
- பிரச்சாரத் தன்மையின்றி எதையும் எளிமையாக கூறுவது.
- சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது ஹைக்கூவிற்கு அழகு
- சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது நல்லது
- ஈற்றடியை சிறப்பாய் அமைப்பது
- மெல்லிய நகைச்சுவை உணர்வோடு அமைப்பது
- இயற்கையைப் பாடுவதுடன்,இயற்கையை மனித உணர்வோடு கலந்து பாடுவது
- ஆழ்மன உணர்வோடும் மெல்லிய சோகமும் இழையோடும் படி அமைத்து பாடுவது
- பிற உயிர்களை தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
இவையனைத்தும் கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் வரையறுக்கப் பட்டது.இதுவே இன்று வரை பலராலும் கடைபிடிக்கப் படுகிறது..மேற்படி வரையறுக்கப் பட்ட விதிமுறைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதற்கான விளக்கம் இந்த கட்டுரைகளின் பல அத்தியாயங்களில் உள்ளது என்பதை அறிவீர்கள்.
ஆகவே.. விதிகளை நன்கு உள்வாங்கி ஹைக்கூவை சிறப்பாக வடிவமைத்து எழுதுங்கள்..
இந்த விதிகளோடு எனது வேண்டுகோள் ஒன்றும் உள்ளது..
கவிதைகளில் நேர்மறைச் சிந்தனைகளை மட்டுமே விதையுங்கள்.. எதிர்மறைச் சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள்.. இதையும் நீங்கள் விதியாகவே கொண்டு சிறப்பான கவிதைகளை வடித்தெடுங்கள்.