தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
“தமிழென்ன தருமென் கின்றாய் ?”
“தமிழ்க்கூட்டம் அறிவு நீட்டும் !
தமிழ்க்கூட்டம் நட்பு கூட்டும் !
தமிழ்க்கூட்டம் அன்பு நீட்டும் !
தமிழ்க்கூட்டம் வாழ்க்கை பேசும் !
தமிழ்க்கூட்டம் தவறை நீக்கும் !
தமிழ்க்கூட்டம் வாநீ என்றேன் !”
“தண்டம்நீ சொன்னது” என்றாய் !
“தமிழ்க்கூட்டம் எல்லாம் நீட்ட
தமிழ்நாட்டில் தமிழ்க்கேன்வாட்டம் ?
தமிழ்நிலத்தில் வடவன் வாழத்
தமிழனிவன் துணைபோ கின்றான்!
தமிழர்க்குச் சொரணை யூட்டும்
தமிழ்க்கூட்டம் மட்டும் போதும் !
உமிகளாய் விருது வாங்கி
ஊதினால் பறப்போர் வேண்டாம் !
விருதுகள் இனியும் வேண்டாம்!
வீரமே விருது என்ற
கருதுகோள் கால்பதிக் கட்டும் !
கண்டவன் நுழைகின் றான்பார் !
நெருக்கடியைப் புரட்டிப் போடும்
நெம்புகோல் அமைப்பைக் கண்டு
வரும்படி அழைத்தால் வருவேன் !
வரும்படி தமிழுக் கென்றாய் !”