புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!
ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !
காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா !
தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !!
உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே !
உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே !
பயிரெல்லாம் அழுகிப்போய் பயனற்று மூழ்கியதே !
வயிறெல்லாம் எரிகிறதே வாழவழி உண்டாசொல் !!
சோழமண்ட லமெல்லாமே சோறின்றி வாடுதைய்யா !
ஆழமாக வைத்தமரம் ஆங்காங்கே கிடக்குதைய்யா !
பாழடைந்த வீட்டினையே பார்த்தேதான் கலந்குதைய்யா !
ஊழித்தாண் டவமிங்கே ஊரெல்லாம் கதறுதைய்யா !!
மனசெல்லாம் கலங்கிடுதே மக்களினம் வாடுதைய்யா !
இனமெல்லாம் அழிந்திடுதே இனிமேலே என்செய்வோம் !
சினமெல்லாம் இயற்கைமேலே சிந்திக்கத் தோனுதைய்யா !
வனமெல்லாம் போச்சுதையா வந்திடிடுமா நல்வாழ்வு !
உணவுக்குக் கையேந்த உயிருக்கும் கையேந்த
பணத்திற்கும் விலைபேசும் பனைமரமாய் எம்வாழ்வு .
மணம்தருமா இனிமேலும் மனிதநேயம் பேசிடுமா !
குணமுள்ள மானிடரே குறைவின்றி உதவுங்கள் !!
உலகிற்கே சோறிட்ட உள்ளமின்று கண்ணீரில் .
பலர்நோக்க எம்குடிகள் பரிதவிக்கும் துயரமிங்கே !
சிலபேரின் சேவையினால் சீர்ப்படுமா சொல்லுங்கள்
உலர்கின்ற நாவுக்கே உதிரத்தைத் தந்திடுங்கள் !!
இருட்டினிலே எம்வாழ்க்கை இரவினிலே உறக்கமின்மை
அருமையான செடிகொடிகள் அடித்திட்ட புயலும்தான்
உருத்தெரியா நிலையினையே உருவாக்கி விட்டதுவே !
எருவெல்லாம் காணலையே எத்திக்கும் ஓலங்கள் !!
குடிப்பதற்குத் தண்ணீரும் குலம்வாழ இல்லையில்லை .
படிப்பதற்குப் புத்தகங்கள் பலருக்கும் இல்லையில்லை
நடிக்கின்றார் பலருந்தான் நாடகமா எம்மினமும் .
வெடிக்கின்ற ஆற்றாமை வெந்தழலில் வாடுகின்றோம் !!
தாயுள்ளம் கொண்டோரே தன்னார்வத் தொண்டோரே
சேயான நாங்கெல்லாம் சேருமிடம் தெரியாது
நோயுற்ற வாழ்வினிலே நொந்தும்தான் கிடக்கின்றோம் .
பாயின்றிப் படுக்கையின்றிப் பனியினிலே வாடுகின்றோம் .
வாழ்வளிக்க வாருங்கள் வருத்தத்தைப் போக்குங்கள்
தாழ்நிலையை நீக்குங்கள் தர்மங்கள் செய்திடுங்கள் !
காழ்ப்புணர்ச்சி வேண்டாவே கலக்கத்தைப் போக்குங்கள் .
ஆழ்மனத்தில் உள்ளதையே ஆக்கினேனே கவிதையாக !!