மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து
       மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா
புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று
       புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் !
வலம்வந்து  வலம்வந்தே   அழகு  மொட்டை
       வன்புணர்வில்   சீரழித்தார்   துடிது  டிக்க
நிலம்மீதில்   எவ்வுயிரும்  செய்தி  டாத
       நீசசெயல்   செய்வதெல்லாம்   மனிதர்  தாமே !

பூக்காத   இளமானைக்   கொம்பு  மான்தான்
       புணர்ந்திட்ட   காட்சிதனைக்  கண்ட  துண்டா
தூக்கத்தில்   சுகம்காணும்   இரவுப்  போழ்தில்
       துணைவியுடன்  இணைதல்போல்  இணைந்தார்  புல்லர் !
கூக்குரல்தாம்  எழுமுன்னே   வாயைப்  பொத்திக்
       குற்றுயிராய்   ஆக்கிட்டார்   இளங்கு  ருத்தை
நாக்குடைய  எவ்வுயிரும்   செய்தி  டாத
       நாசசெயல்  செய்வதெல்லாம்   மனிதர்  தாமே !

மயிலிறகைப்  பிய்த்தல்போல்  பிய்த்தெ  றிந்தார்
       மணம்வீசா  மொட்டதனைக்  கசக்கெ  றிந்தார்
வெயிலினிலே  துடித்திட்டப்  புழுவைப்  போல
       வேதனையில்  துடித்தபோதும்  புணர்ந்தெ  றிந்தார் !
குயில்கூவும்  முன்னதனின்   கழுத்த  றுத்துக்
       குருதியிலே   மிதக்கவிட்ட   கொடுங்கோ  லோரைக்
கயிற்றினிலே  கட்டியந்த   உறுப்ப  றுத்துக்
       கதறிடவே   நடுத்தெருவில்  நிறுத்த  வேண்டும் !

(சென்னையில்  சிறுமியைப்  பதினேழு  கயவர்கள் கெடுத்த
கொடுஞ்செய்தியைப்  படித்தால்  எழுந்த  சினக்கவிதை)