தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே!
தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே!
தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே!
எங்கள் சேது சமுத்திரமே!

சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்
சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே!
சீர் மரபினனாம் தமிழனின்
சிந்தைக்கு சோறூட்டும் அகல்விளக்கே!
அறிவுக்கடலே! ஆரமுதே!

பெண் விடுதலைக்காய் குரல் கொடுத்த நளாயினியே!
திகட்டாத தமிழால் வீரமுதூட்டிய தென்பாண்டிச் சிங்கமே!
வற்றாத காவிரியாய் வளைய வரும் ராஜ ராஜ சோழனே!
வானவர்தம் இன்மொழியாம்
வள்ளுவன் வாக்கினிலே நின்ற செம்மொழியே!
மற்றற்ற பொதுவாழ்வில்
பற்றற்று உழைத்த பெருந்தலைவனே!

கைம்பெண்ணாய் கதறிய தமிழன்னைக்கு
துளி மையால் பொட்டிட்ட கலைஞனே!
‘மாற்றுதிறன்’ சொல் தந்த மாமுனியே!
மாசில் வீணையே!
உன் மேல் காமுற்ற காலன்
நரன் போல் வந்து இரந்து கேட்டானோ?
நீ நாள்தோறும் தொழும் தமிழ்போல்
வந்து தயவாய் கேட்டானோ?
ஏன் கொடுத்தாய் நின் இன்னுயிரை?
அள்ளிக்கொடுத்த நீ பரியேறும் எமனுக்குக்
கிள்ளிக்கொடுக்கலாகுமோ?
தத்தளித்த தமிழினத்தைக்
கரைசேர்த்த கட்டுமரந்தான்
கடலில் மூழ்கிப்போகுமோ?

முதல்முறையாய் இன்று
கண்ணீர் கசக்கிறது,
நீ உப்பிட்ட உணவில்
ஒரு பருக்கையேனும் உண்ணாத தமிழனில்லை
உன் வியர்வை ஈரத்தில்
தழைத்து வளராத தமிழுமில்லை…

நீ நேசித்த தமிழ் மண்
உன் உடலை யாசிக்கிறது
விழுந்தும் விழாத மழையானவனே
பிரியாவிடை கொடுக்கிறோம்
போய் வா…

ஆயினும் ஒன்று மட்டும் கேள்,
ஒரேயொரு இறுதி கோரிக்கை…
உன் கல்லறையில் தவழவரும் காற்றுக்கு
தமிழ் கற்றுக்கொடுத்துவிடு
வருங்கால சந்ததிகள் மூச்சாய் அதைக் குடித்து
உயிர் பிழைத்துக்கொள்ளட்டும்.


3 Comments

தமிழ்மாமணி புலழர் வெ அனந்தசயனம் · செப்டம்பர் 5, 2018 at 19 h 16 min

மிகச்சிறந்த கவிதை வாழ்த்துகள்!

முத்துராஜ். தெ.ச · செப்டம்பர் 8, 2018 at 3 h 31 min

அற்புதமான நடை, பொருள், மொழி வளம்.

திருவாசகம். ஜெ · அக்டோபர் 30, 2018 at 4 h 07 min

தொடர் நடையில் மொழி நயம்.. சிறப்பு… வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்