சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !
உச்சிவேளை தகித்தாலும்
உணர்த்தும்பசி போக்கிடவே
கச்சிதமாய் பணிமுடிக்கும்
கல்மனதுக் காரர்களே !
மெச்சிடவே பலருமிங்கே
மெய்வார்த்தைக் கூறிடுவர் ,
தச்சுத்தொழில் செய்தாலும்
தவறில்லைத் தரணியிலே ,
காகிதமே பொறுக்கினாலும்
கட்டாயம் அதுதொழிலே ,
ஆயுதங்கள் செய்தாலும்
அத்தனையும் தொழில்தான் ,
தாகமெனத் தவிப்போர்க்குத்
தண்ணீரே பெருந்தெய்வம் ,
சோகமெலாம் தீர்ந்துபோகும்
சுயமான உழைப்பாலே !
உழைப்புக்கு இந்நாளே
உயர்வானத் திருநாளாம் ,
பிழைப்புக்குப் பலவழிகள்
புவிதனிலே இருந்தாலும்
மலைப்பாக எண்ணாமல்
மாநிலத்தின் வேலைகளைக்
களிப்போடு செய்கின்ற
காவலனாய் மாமனிதன் .