மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்
இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்?
எழுந்து வாடா எரிதழல் போல
பழுதை எல்லாம் பட்டென எரித்திடு!
ஆண்ட இனமே அடிமை வாழ்வா?
மாண்டது போதும் மற்போர் செய்திடு!
அடிமை வாழ்வை அடித்து விரட்டு
விடிவு பிறந்திட விழியைத் திறந்திடு
மான மறவா! மண்ணை மீட்டிடு
வானம் கூட வந்து வாழ்த்திடும்
தமிழ்நிலம் எங்கும் தர்ப்பை புல்லே
அமிழ்த தமிழை அயலான் அழித்தான்
உன்மொழி பேசிட உனக்குரிமை இல்லை
நன்மொழி மறந்து நஞ்சாய் பேசினை
உலகில் உன்போல் உள்ளவர் இல்லை
நிலத்தை இழந்து நடுத்தெரு வந்தாய்
ஆதி குடிநீ ஆண்ட மறவா!
ஏதி்லி போல எங்கும் திரி்கிறாய்
வேண்டாம் இழிவு விலங்கை உடைத்திடு
பூண்டோம் போர்க்களம் புலியென புறப்படு
பகைகள் எல்லாம் பரிதிமுன் காரிருள்
தொகையாய் சேர்த்திடு தொல்லைகள் விலகும்
அரிமா தமிழா! அடங்கல் முறையா?
நரிமா ஆள நடுங்கிக் கிடப்பதா?
கரிமா எனவே காட்டு உன்திறன்
பரிமா போல பாய்ந்து குதித்திடு
உன்மொழி தமிழ்மொழி உன் இனம் தமிழினம்
உன்நிலம் தமிழ்நிலம் உணர்ந்திடு நன்றே
மொழியினம் நாட்டை மீட்க
விழித்தெழு இன்றே வீறுடன் மறவா!