ஒரு ஜன்னலின்
கதவொன்றில் தெரிகிறது
அவளின் நிழலாடும்
உருவம்…
இரவுநேர வெப்பச் சலனத்தில்
கிணற்று நீரில்
எத்தனை முறை குளிப்பது
சலித்துக்கொள்ள முடியாத
உடல்சூட்டில் தணியாத
பெண்மையின் படைப்பு
பகலில் கூட தூங்கமுடியாது
இனம்புரியாத கனவுகளை
ஏற்க மறுத்தாலும்
பருவத்தின் பிடிக்குள்
சிக்கித் தவிக்கவே செய்கிறது
மனத்தின் கெண்டைகள்
மீண்டும் ஜன்னலின்
கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே
விம்முகிறாள்…
யாராவது தூண்டிலோடு
வருவார்களா?
துன்பக் கடலின் மீது
வலைவீசி என்னை பிடிக்க!