உயர்வா யுலகில் பிறந்தாலும்
      உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
      மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
      துடித்தே வாழ்ந்து மடிகின்றோம்
வியப்பாய் வாழத் துடித்தாலும்
      விரிசல் கொண்டே வாழுகிறோம்!

தயங்கித் தயங்கி வாழ்வோரும்
      தமக்குள் புழுங்கிக் கிடக்கின்றார்
பயக்கும் நன்மை புரிபவரோ
      பயமே யின்றிச் சுழல்கின்றார்
இயக்கம் இயக்கம் என்போரும்
      இயங்கா வண்ணம் கிடக்கின்றார்
மயக்கம் தெளிந்தால் மாத்திரமே
      மண்ணில் வாழ முடியுமிங்கே!

உழைத்தே வாழத் துடித்தாலும்
      உறவே கண்ணை வைக்கிறது
பிழைப்பே யின்றிக் கிடந்தாலோ
      பிதற்றும் சொற்கள் கசக்கிறது
இலைபோல் கருகிக் கிடப்பதிலே
      இன்னும் என்ன இருக்கிறது
மலைபோல் பாரம் தலையேற
      மன்றாட் டம்தான் வாழ்விங்கே!