கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

சுட்டழிக்குஞ் சுடு குழலுந் தேமி யழுகுதே
சுகந்தம் மிகும் பிஞ்சுகளைக் கண்டு புலம்புதே
சிட்டுகளாம் மழலைகளின் உடலம் எரியுதே
ஹிட்லரிசப் பிரயோகம் அங்கு தெரியுதே
கொட்டுங் கதிர்க் குண்டுகளின் வாயினிலேயிட்டு
கொழுந்து விட்டு எழுந்து பற்றும் தீயினிலே பட்டு
கட்டை கூட எஞ்சவில்லை ரோஹிங்கா மண்ணில்
காட்சிகளைக் கண்ட பின்னே சமுத்திர மிரு கண்ணில்

ஆறுதலும் மாறுதலும் அல்லாஹ்வின் பொருட்டே
ஐ நா வின் கண்களுக்கு எந்நாளும் இருட்டே
வீறு நடை போடும் ஒரு கால முருவாகும்
வெந்துருகி மியன்மாரோ நொந்திறந்து போகும்
வேறு வழி இல்லாமல் கால்களிலே வீழும்
வேக்காட்டு ரோஹிங்கோ வென்று அரசாளும்
ஊறும் விழிக் குருதிகளே உணர்வுகளே சாட்சி
ஊறு செய்யும் மியன்மாரில் வீழ்ந்து விடும் ஆட்சி

படைப்பாளா பர்மாவின் பாவிகளை அழித்து
பசியாறும் மிருகத்தை பரிதவிப்பில் கிடத்து
உடைபட்ட இதயங்கள் உயிர் வாழ வேண்டும்
உயிர் கொல்லும் அரக்கர்கள் உடன் மாள வேண்டும்
தடைப் பட்டுப் போகாத காரூண்யம் நீ காட்டு
தார்மீகம் மறந்தோர்க்கு உடன் வை நீ வேட்டு
நடைப்பிணமாய் ஆனோர்க்கு நீதானே காப்பு
நரபலியைச் செய்வோர்க்கு ரப்பே நீ வை ஆப்பு

மனிதர் இல்லா நாடொன்று யாது என்று கேட்டால்
மடக்கென்று சொல்லிடுவேன் மியன்மார்தானென்று
புனிதமிகு புத்தர் ஆசி கிடைக்காத நாடு
புலைநெஞ்சுக் காரன் வாழும் மிருகத்தின் கூடு
தனி மனித ஒழுக்க நெறி துளி கூட இல்லை
தாய் தாரம் யாரென்ற வேறுபாடில்லை
சனியன்கள் கூடியங்கே சதித்திட்டம் போடும்
சாமானியன் உயிர் அங்கே உடல் விட்டு ஓடும்

ஐயையோ சிறுசிகளை அழிக்கின்ற காட்சி
ஐநாவே கண்களுக்குத் தெரிகின்றதா?
கையிரண்டை மேலே கயிற்றோடு கட்டி
கத்தியால் குத்துவது புரிகின்றாதா?
பையையே கிழித்துக் கருவாகி இருக்கும்
பாலகப் பூவினை வெட்டுகின்றான்
மெய்யிலே கோடரி வாளினைக் கொண்டு
மிருகமாய் மாதரைக் கொத்துகின்றான்

கண்களைப் பிடுங்கி எடுக்கின்ற காட்சி
கண்டதன் பிறகு தூக்கமில்லை
பெண்களை வதைக்கும் துயர்மிகும் காட்சி
பேசிட எனக்கு நாக்குமில்லை

புத்தன் புகன்ற போதனை யெல்லாம்
செத்துப்போனதடா
போதி மாதவன் பேரால் ரோஹிங்
தீயா யானதடா!

எத்தனை முஸ்லிங் கத்தியின் முனையால்
குத்தப் படுகின்றார்
எரியும் நெருப்பிற் கரியாய் மாறி
உயிரை விடுகின்றார்

வித்துவக் கதைகள் பீத்திடும் ஐ.நா.
விழிகளில் பெருங் குருட்டோ?
வீரக் குமிறல் விடுத்திடுவோர்க்கு
வாயினில் பொய்த் திரட்டோ?

குழந்தைக ளென்ன பாவஞ் செய்தார்
கொழுந்து நெருப்பிலிட?
குமரிக ளென்ன அமரா செய்தார்
கொதிக்கும் நெய்யிலிட?

விழுந்தெழும் முதிய ரழுந்திடுஞ் சாபம்
விடியலை உண்டாக்கும்!
விட்டில் பேய்கள் விடைபெறுங் காலம்
விரைவி லுண்டாகும்!

வையக மெல்லாம் வாழ்கிற மனிதா
கைகளை யேந்தி விடு!
மெய்யது வாழும் பொய்யது வீழும்
மேலவன் துணையோடு!

பையினிற் காற் றிருக்கும் வரைக்கும்
பாய்ந்தே போராடு
பட்டிடும் வலியிற் பிறக்கும் வீரம்
அழியா வேரோடு

சாமிகள் செய்யும் கொடுமைக்கு இறைவன்
சட்டப் படியே தண்டிப்பான்
சன நாயகத்தை மதித்த எவனும்
காவிகள் செயலைக் கண்டிப்பான்

மாமிசம் உண்ண மறுக்குது நெஞ்சம்
மக்களின் அவலத்தைக் கண்ட பின்னே
மண்டையில் மழித்த மயிரினும் கூட
மனிதாபிமானம் அங்கு இல்லே

பெருக்கல் விருத்தியின் வேகம் அன்று
பிறக்கும் உலகின் சனத் தொகை தான்
பெருக்கல் விருத்தியை மேவி இறக்கும்
சிறுபான்மையினரின் பிணத்தொகை தான்

உருக்கும் எந்தன் இதயம் நொந்து
உணர்வைத் தந்தேன் கவிதையிலே
உதிரம் சிந்தும் உயிர்களைக் கண்டு
உறக்கம் இல்லை விழிகளிலே

இரங்கல் பிரார்த்தனை புரிவதைத் தவிர
என் செய்வேனோ எம்முறவே
இருக்கும் வரைக்கும் இறைவனை நோக்கி
விரிக்கும் எந்தன் இரு கரமே

நர பலி செய்யும் அரக்கர்கள் கூட்டம்
நாசம் ஆகியே போகட்டும்
நதிகளில் மிதக்கும் ஆத்மாக்கள் எல்லாம்
சுவனச் சுனைகளில் வாழட்டும்

வஞ்சக் குணத்தில் வக்கிரம் செய்யும்
வடவா முகாக்கினி அங்கும் உண்டு
வற்றிய குளத்தில் கல்லெறி போடும்
வம்பர்கள் கூட்டம் இங்கும் உண்டு

பஞ்சசீலக் கொள்கையில் நிறைந்தோர்
பகுத் தறிவோடு நடப்பதுண்டு
பஞ்சமா பாதகச் செயலில் உறைந்தோர்
படைத்தவன் பெயரைக் கெடுப்பதுண்டு

பிஞ்ச சேலைத் துண்டொன்றில்லை
பிணமாய்ப் போன மேனியிலே
பிஞ்சையுந் துளிரையும் பூவையும் சேர்த்து
எரித்தார் ஹிட்லர் பாணியிலே

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே!
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

கால் கை இல்லா
முண்டங்களாக
காற்றுப்போன உடலங்கள்
கண்ணீர்ப் பெருகிக்
குருதியிற் கலந்து
கடல்கள் சுமக்குஞ் சடலங்கள்

தோல் நிறம் வெள்ளை
என்பதினாலோ
சூசிக்கு நோபல் விருது
தொட்டில் குழந்தை
செய்ததா பாவம்?
தோஷமே நெஞ்சிற் கருது

வால் பிடிப்போர்க்கே
வசதிகள் செய்யும்
ஐநா உனக்குக் குருடா?
வஞ்சச் செயலைக்
கண்டிக்காத
மனதில் படிந்தது துருடா!

நீரில் தாமரை
மலரும் காட்சி
நினைவில் கொண்டேன் சுகண்டா
நீலோற் பலத்தை
மிதக்கக் கண்டேன்
நெருப்பாய் எரிந்தது அகண்டா

மியன்மார் அழிந்து
போகும் விரைவில்
மிதற்கும் ரத்தம் சாட்சியடா
மிருகத்தனமாய்
வதைகள் செய்யும்
மிருகப் பெட்டை ஆட்சியடா

அயல் நாடுகளின்
கண்களுக்குள்ளே
அந்தகம் பிடித்துப் போனதடா
ஐநாவுக்குக்
கண்கள் கெட்டு
அட்டுக் குடித்துக் கோணுதடா

பயமா? வேண்டாம்
பர்மா அழியும்
படிப்பினை சொல்லும் வரலாறு
பால் நிலவொன்று
படுக்கையில் இன்று
பார்த்திடப் பொங்கும் பேராறு

நயனம் மூடி
இருந்தால் என்ன
நானிலம் உன்னைப் பார்க்கிறது

நாடித் துடிப்பு
நின்றதை எண்ணி
இதயம் வலியைக் கோர்க்கிறது

கூர் விழி மூடி
இதழ்கள் விரிந்த
குழந்தை மலரோ பாவம்

கொடுங்கோல் செய்யும்
ஆங்சான் சூசிக்
கொள்கையிலே அகம்பாவம்

பாரில் கொடூரம்
நடக்கும் போது
படைத்தவன் தானே காப்பு

பர்மா உன்னை
எரிக்கும் வகையில்
பரமன் வைப்பான் ஆப்பு

வேருடன் அழிந்து
போகும் காலம்
விரைந்து வருமே சூசி
விதைக்கும் விருந்தை
நெருப்பாய் அருந்த
எரிந்து தந்தேன் ஆசி

கருப்பை சுமந்த
பெண்ணாய் இருந்தால்
கவலை உனக்கு வந்திருக்கும்
கண்ணீர்க் கடலில்
மிதக்கும் பூவைக்
கண்டால் இதயம் நொந்திருக்கும்

துருவைச் சுமந்த
துவேசி உனக்கு
துயரக் கோடு தெரிகிறதா
துளிராப் பிஞ்சின்
தூக்கம் கொடுக்கும்
துன்பக் கண்ணீர் புரிகிறதா

விருப்பும் வெறுப்பும்
விலக்கிட வேண்டும்
விதி முறை அறியா மோடையரே!
விலங்கா? செங்கோல்
விளங்கா மிருகம்
விபரம் தெரியாக் காடையரே !

உருப்படியான
முறையில் அங்கே
உரிமைக் காற்றுக் கிடைக்கிறதா ?
உதவும் வகையில்
கைகள் கொடுக்க
உங்கள் நெஞ்சம் துடிக்கிறதா?

தொடர் கரு வறுக்கும்
துஷ்டரை ஒழிக்க
தோட்டாப் போலும் ஒன்றாக
தொழுகையில் நிதமும்
கரங்களை ஏந்தி
துஆக்கள் கேட்போம் நன்றாக

இடர் மலை சுமக்கும்
இரத்தம் கொதிக்கும்
இதயம் நொந்த எம்முறவே
இது கவியல்ல
இடியுடன் மின்னல்
எனக்குள் உறக்கம் இலை அறவே

படர் துயர் தாங்கும்
ரோஹிங் இனமே
பாவிகள் செய்தது சுத்திகரிப்பு
பன்மைத் துவத்தை
மதிக்கா நாட்டில்
பாய்ந்து பிடிக்கும் எரிநெருப்பு

கடலெனத் திரண்ட
கவலைகள் எல்லாம்
சுனாமி அலையாய் மாறட்டும்
கடும் போக்கான
கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்


1 Comment

முகம்மது அலி · செப்டம்பர் 22, 2017 at 15 h 41 min

கவிதையில் படம் பிடித்து காட்டும் கவிஞரை (இஸ்மாயில் ஏ முகம்மட்) பாராட்ட வார்த்தைகளில்லை /வரவில்லை / ரோஹிங்கா மக்களின் துயர் மனதில் துக்கத்தைத் தந்து இதயமே வேகமாக துடிப்பதால் இறைவன் அவர்களுக்கு நல்வாழ்வை தந்தருள இறைஞ்சுவோம் /ஆமீன்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்