ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?
வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.
பாளைமடித் தேனை வென்று
பல்சுவையிஞ் சாரமுண்டு
பைந்தமிழிற் புதுமை ஒன்று வரவு – திட்டப்
பாதையிலே மாற்றங் கொண்ட துறவு!
மாற்ற மென்றாற் புது வளர்ச்சி
மரபுக்கு ளது மலர்ச்சி
மானிலத்தி னொப்புரவுத் தன்மை – கெட்ட
மாற்றங்களால் மாளுந் தமிழ் உண்மை
தோற்றங் கொண்ட தொற் றமிழிந்
தொல்காப்பியம் முதற் கொண்டு
தோகை விரித்தாடுகின்ற மொழியில் – ஏதும்
துன்பம் வரின் பெருகும் நீர் விழியில்
நன்னூலிற் பவணந்தி
நயந்துரைத்த இலக்கணத்தை
நல்லபடி நோக்கி விடின் புதுமை – மனம்
நாடும் வழி நாடிடுவோர் பதுமை
முன்னோர்கள் அமைத்த விதி
முறைமையிலே படைத்த மதி
முன்னேறிப் போகு மென்ப துறுதி – செம்
மொழிக்கென்றும் காலமில்லை இறுதி!
மாற்றம் என்ற போர்வையிலே
மரபழியும் நிலை வந்தால்
மாய்த்துயிரைப் போக்குவதே மானம் – சில
மாற்றங்கள் நமக்கு அவமானம்
காற்று மின்னல் வேகத்திற்
கணிப் பொறிகள் தேகத்தில்
காலமெல்லாஞ் செம்மொழியைச் சேர்ப்போம் – இந்தக்
காசினியைத் தமிழ்ப்பூவாற் கோர்ப்போம்!
பயனுள்ள மாற்றங்கள்
பாருக்குள் நடக்கிறது
பல்வகைமைப் பனுவ லிங்கே வேண்டும் – அதற்கு
பகலிரவாய் உழைப்போமே யாண்டும்
சயனத்தில் மூழ்கி விடும்
சண்டாளர்ப் பெருக்கெடுத்தாற்
சாரமுள்ள செந்தமிழே வாடும் – இந்தச்
சங்கதிக்கு யென்று வருங் கேடும்!
வள்ளுவனிஞ் சொல்லனைய
வையகத்தோ டொட்டொழுகி
வாழ்வதிலே யென்று முண்டு ஏற்றம் – இணை
வலைத்தளத்தில் வீசும் தமிழ்க் காற்றும்
தெள்ள முதச் சாகரத்தின்
தெளிவான பொக்கிஷத்தைத்
தேசம் பலத் தாண்டச் செய்வோம் வாரீர் – சுனைத்
தேனருவி பொங்குவதைப் பாரீர்!
அறிவியலின் பெரு வளர்ச்சி
அகிலத்தை நிறைக்கிறது
அதற்கேற்ற அழகாடை கொடுப்போம் – தமிழ்
அணங்கைத் தான் ஆடையென உடுப்போம்
நெறிமுறைமைப் பண்பாடு
நெக்குவிடா அன்போடு
நெருக்குற்ற செம் மொழியைக் காப்போம் – இள
நெஞ்சங்களின் இதயத்திற் சேர்ப்போம்.
1 Comment
R.T.Suresh · ஜனவரி 10, 2023 at 1 h 11 min
அருமை