ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!
இருமொழிச்சட்டம் கொணர்ந்து
மொழி இலக்கோடு பயணம் தொடங்கி
சென்னை மாகாணத்தை தமிழ்நாடென
தலைநிமிரச் செய்தாயே அறிஞர் அண்ணாவே…!
காட்டுப்பன்றிகள் குதறிய அவலமாய் இன்று
கல்விகொள்கை சீரழிந்து விட்டதையா…
மருத்துவ படிப்பு வேட்கையா?
விழுங்கிவிட்டு வா…
“நீட்” எனும் நெருப்புத் துண்டை !
என போதிக்கிறார்களே…
வானுலகில் நான் இப்போது உங்களின்
அரவணைப்பில் தான்… எனினும்
வெந்து தணிந்த சாம்பல் அல்ல…
நான் போராட்ட களத்தில் என்றுமே
அனிதா எனும் நீறு பூத்த நெருப்பு!