சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
      சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
      இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத்
      தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச்
      சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்டு க்குள்ளோர் நாடு – அங்கே
      அகிலமுஸ் லிம்களின் கூட்டுமா நாடு
மரபு வழிகளில் தேடல் – புவி
      மனித நதிகளின் சங்கமக் கூடல்

வெள்ளை யுடையில் மகிழ்ச்சி – மக்கள்
      வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் – அங்கே
      உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்

நிலவதும் நாணியே கேட்கும் – ஹாஜி
      நிலவிடும்பே ரொளி உன்னிப்பாய்ப் பார்க்கும்
உலவும்ச மத்துவம் மெய்க்கும் – உண்மை
      உலகம் தெளிந்திட நாட்டியே வைக்கும்!