கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.
அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.
இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது. இப்படலத்தில் மணமகளான (பூதேவி) சீதைக்கு அலங்காரம் செய்யும் அழகினை, கம்பர் தனது கவித்திறனை, இந்த “ கோலம் காண் படலம்” முழுவதிலும் தெள்ளு தமிழ்ச் சுவையில் அள்ளித் தெளிக்கிறார். படிக்கப் படிக்க இப்பிறவி நமக்குப் போதாது என எண்ணத் தோன்றுகிறது.
தோழியர் சீதைக்கு அலங்காரம் செய்வதை…
குழலில் மாலை அணிதல், சுட்டியணிதல், குழையணிதல்,கழுத்தணி யணிதல், முத்து மாலை அணிதல், கைக் கடகம் அணிதல் , மேகலையும் தாரகைச் சும்மையும் அணிதல், சிலம்பு அணிதல், விழிகட்கு மையிடுதல், திலகம் இடுதல், மலர் பல சூடுதல் …என உச்சி முதல் உள்ளம் கால்கள் வரை அழகுபடுத்துதலை… அடடா… என்னவென்று சொல்வது… அற்புதம்… அற்புதம்…!
…இதிலிருந்து சில கவிநயம் காண்போம்…
அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
அணி என அமைக்குமாபோல்.
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை
உருவினை மறைப்பது ஓரார்.
அமிழ்தினைச் சுவை செய்தென்ன.
அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம்
ஏழைமை உடைத்து மாதோ!
அழகான கண்களுக்கு அழகூட்டவே இமைகளை இறைவன் படைத்தது போல், தோழியர் சீதையின் அழகிய மேனிக்கு அணிகலன்களால் (மறைத்து )வனப்பூட்ட முயன்றனர். அமுதுக்கு மேலும் சுவை சேர்ப்பார் உண்டோ ? என்று சொல்லும் கம்பன் இங்கே அழகுக்கு அழகு செய்தனர் என்று சொல்லி…. அலை ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்த நிலத்து மக்கள் ( நன்மை புரிவதாக நினைத்து தவறு செய்யும் ) அறியாமை உடையவர்கள் என சீதையின் உடலழகை சொல்ல வார்த்தைகளின்றி…
”அமிழ்தினைச் சுவை செய்தென்ன.
அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம்
ஏழைமை உடைத்து மாதோ!”
என நமக்கு உணரவைக்கும் சொல்லழகை இங்கே காண்கிறோம்.
மொய் வளர் குவளை பூத்த
முளரியின் முளைத்த. முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண்
மீன் உண்டேல். அனையது ஏய்ப்ப.
வையக மடந்தைமார்க்கும்.
நாகர் கோதையர்க்கும். வானத்
தெய்வ மங்கையர்க்கும். எல்லாம்.
திலகத்தைத் திலகம் செய்தார்.
இங்கே பாருங்கள் சீதையின் கண்கள்….தாமரை மலரிடைப் பூத்த இரு குவளை மலர்களைப் போல் இருந்ததாம். மூன்றாம் பிறையின் நடுவே உள்ள விண்மீன் தோற்றம் போல் …மூவுலக மங்கையர் திலகத்துக்கே திலமிட்டனர் தோழியர் என தனது கவிநயத்தின் நுட்பத்தை இங்கே பதிவிடுகிறார் கம்பர் (இடையுலகமாகிய ) மண்ணக மங்கைமாரும்.
(கீழ் உலகாகிய) நாக உலக மங்கையரும் (மேல்உலகாகிய) வான் உலக மங்கையரும் ஆகிய மூவுலக மங்கையர் எல்லோர்க்கும் திலகமானவள் சீதை )
இவ்வாறு அலங்காரம் முடிந்த நிலையில் தோழியர் புடைசூழ நிலமகள் சீதை மன்னன் வீற்றிருக்கும் மண்டபம் நோக்கி வருகிறாள்… இதனை…
”கற்றை விரி பொற்கடை பயிற்றுறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை மிக்கு. இடை துவன்றி.
வில் தவழ. வாள் நிமிர. மெய் அணிகள் மின்ன.
சிற்றிடை நுடங்க. ஒளிர் சீறடி பெயர்த்தாள்.”
ஒளிக்கதிர்கள் விரிகின்ற பொன்னைக் கடைந்ததனால் எழுகின்ற ஒளி மிகும் பதினாறு கோவையணியும்; – (தன்) இடையைச் சுற்றிலும் மணிகள் இழைக்கப்பட்டுள்ள மற்றை அணிகலன்களும் மிகுந்து நெருங்கி; அவற்றின் ஒளி எங்கும் பரவவும். (நடுவில்) தன்மேனி ஒளி விளங்கவும். தன் உடலில் அணிந்துள்ள பிற அணிகள் மின்னிடவும்; -(அணி கலங்களின் பாரத்தால்) நுண்ணிய இடை வருந்த. ஒளி மிகும் தன் சிறிய பாதங்களை எடுத்து வைத்தாள். அடடா…என்னே அற்புதமான சொற்சிலம்பம் ஆடுகிறான் கம்பன் இங்கே ….செவிநுகர் கனிகளாய் அவனது இலக்கியத் தமிழ் அமுதினும் இனியதாய் இருக்கிறது.
அரச குடும்பத்தினர் செல்லுங்கால். விற்படையும் வாட்படையும்
ஏந்தி மெய்காவலர் உடன் சூழச் செல்லும் மரபு வழி
“வில் தவழ.வாள் நிமிர. மெய் அணிகள் மின்னச் – சிற்றடி பெயர்த்தாள்”
எனச் சீதை நடந்து வந்ததை நயந்தோன்றக் கூறினார். வில். வாள். மின் முதலிய ஒளி வெள்ளங்கட்கிடையே வந்தாள் என்பதனால். பிராட்டி உலகச் சோதியாக விளங்கினாள் என்று கம்பன் தன கவிநயத்தால் நம்மையெல்லாம் ஆட்கொள்கிறான்.
2 Comments
Siva · நவம்பர் 13, 2019 at 12 h 58 min
“இமிழ் திரைப் பரவை ஞாலம்
ஏழைமை உடைத்து மாதோ!”
இதற்கு பொருள் விளங்கவில்லை ஐயா மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் ஐயா
LinkedIN Scraping · ஏப்ரல் 16, 2025 at 16 h 59 min
I am really impressed together with your writing abilities as smartly as with the structure on your blog.
Is this a paid subject or did you modify it yourself?
Anyway keep up the excellent quality writing, it’s rare to look a great weblog like
this one these days. TikTok ManyChat!