கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.
இராமன் இலக்குவன் இருவரையும் மறைவில் நின்று காணும் அனுமன் …
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர் “ என்று எண்ணி வியக்கிறான்
(இந்திரனும் அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் அஞ்சும் வீரர்கள். )
சிறப்பான வரிகளால் அநுமனின் அறிவாற்றல் இங்கே தெரிகிறது கம்பன் வழி.
இராமனையும் இலக்குவனையும் பார்த்த மாத்திரத்தில் அனுமன் ….
“கவ்வை இன்றாக நுங்கள் வரவு”
தங்களின் இருவர் வரவும் துன்பமில்லாத நல்வரவு ஆகுக என்று கூறுகிறான்.
மகிழ்வுடன் இராமனும் இலக்குவனும் அனுமனை நோக்கி நீ யார் என்று வினவ….
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ”
என்று பதிலுரைக்கிறேன்.
அப்பொழுதே இராமன் அனுமனின் அறிவுத்திறனை கண்டு வியந்து இராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்கு நிரந்தரமாய் பெரிய பட்டப் பெயர் கிடைக்கிறது.
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த பறந்த உலகில் புகழுடன் அனுமன் கற்காத கலையும் வேதங்களும் இல்லை.
இவன் பேசிய சொற்கள் அப்படிப் பட்டவை . வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
என இராமன் புகழ்கிறான். இதனால் அனுமன் “ சொல்லின் செல்வன் “ என்ற பட்டப்பெயரைப் பெறுகிறான்.
இங்கே பாருங்கள்….அனுமன் எனும் கதா பாத்திரத்தை அறிமுகப் படுத்தும் போதே இராமன் வழி “ சொல்லின் செல்வன் “ இவன் என்று…. அறிவுத்திறன் கொண்டவன் என முத்திரை இட்டு காவியம் முழுவதும் இராமனின் சிறந்த சேவகனாக செயல்படவைக்கிறார் கம்பர்.
கம்பனின் சொல்நயமும் காவியப் போக்கும் என்னவென்று சொல்வது….? செதுக்கப்பட்ட காவியம் அல்லாவா ?