இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான் .. !!
உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப் பகைக்கு
சூத்திரம் போதித்தான் .. !!
உன்மதம் என்மதம்
உன் நாடு என் நாடு
உன் குலம் என் குலமெனும்
அங்குல மங்குல மந்திரமதை
ஆணியாய் உள்ளிறக்கித்
தணியாத தாகம் தீரத்
தன் இன இரத்தம் குடித்தான் .. !!
உன் மொழியில்
உனக்குச்சொல்ல
தன் பெயரை மாற்றியோனை
உன் கடவுள்
என் கடவுளென
உறித்தெடுத்து
ஒவ்வொன்றாய்
பிரித்தெடுத்தான்
சாதிக்கொன்றாய்
எறிக்கொல்லிக்கு பயனான
உறிநாரை மட்டுமே தனதாக்கி
அரியதொரு தேங்காயை
அறிய ஏனோ அறவே மறந்தான் .. !!
உத்தமர் யாவருமே
உத்தமராய் வந்ததெல்லாம்
உலக இருட்டுக்கு
ஒளிக்கூட்டவேயன்றி
உன் வயிற்றுப்பிழைப்புக்கு
வழி காட்டவல்ல!
பெருமையையும்
சிறுமையையும்
பேசித்திரிய பிறப்பொன்றும்
நீ தேர்ந்தெடுத்ததல்ல
இட்டபிச்சைக்கு ஏற்ற
பாத்திரம் மட்டுமே நீ .. !!
அவரவர் நம்பிக்கையில்
அவரவரை வாழ விடு
அப்படியும் சொல்லியே
ஆகவேண்டுமெனில்
அதற்க்குரியவனாய்
நீ முதலில் மாறு. !!
ஆன்மீகமென்பது
அகம் சார்ந்த ஞானம்
புற வர்ணங்களால் இருட்டை
வெண்மையாக்க முயலாதே ..!
தவறான ஒன்றெனினும்
சரியென்று நம்பியோரை
சரியானவன் கடவுளென்றால்
சரிசெய்யத் தவறுவானோ
விளக்கிட வந்தோரெல்லாம்
விலங்கினத்தோடு உன்னை
பிரித்தெடுக்கத்தானேயன்றி
விளங்காமல் திரிவதற்க்கல்ல
மீண்டும் நீ …
விலங்காகி மாய்வதற்கல்ல
சத்திய நூலானதை
சதை மறைக்கும்
ஆடையாக மட்டுமே
மேனி போர்த்தாமல்
புத்திச்சுடறொளிர
தீபத்திரியாக்கு …. !!
முத்திய தலை பித்தம் சாம்பலாகி
உனை
முடக்கிய மத
பக்கவாதம் சீராகும் .. !!