(கலிவெண்பா)
சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி
மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி
என்னுள் கருத்தாய் எழுந்து எழுதிடக்காண்;
ஊற்றுப் புனல்போல உள்ளம் களிப்புற
ஆற்றுப் பெருக்கேபோல் ஆர்த்தெழந்து மேலோங்க
மண்ணிற் பிறந்த மனநிலையை விட்டொழித்து
விண்ணிற் சிறகடித்து விர்ர்ரென் றெழுவதுபோல்
எங்கும் பறந்தேன்; இணையில்லா இன்பநிலை
பொங்கி வழிந்திடவே பொந்துகின்றேன் இன்பத்தை;
கோலக் கருவானங் கூத்தன் விரித்துவைத்த
நீலத் திருமேனி நின்றாங்குக் காட்சிதரக்
கண்டு களித்தோரும் கையால் விசிறிவிட்ட
மண்டுவெள்ளிக் காசுகள்போல் வான்வெள்ளிக் கூட்டங்கள்
எண்ணி மகிழ்ந்திருந்தேன் மேல்வானிற் மின்னுமெழில்
கண்டு களித்திருந்தேன் கண்கொள்ளாக் காட்சியினை;
கார்மேகக் கூட்டங்கள் கான மழைபொழியத்
தேர்போல ஓடிவர சேர்ந்தொன்றாய் ஊர்ந்துவர
தோகை மயிலானேன் துள்ளும் மனத்தகத்தே;
ஓகை மிகவாகி ஓவென்று கூவிக்
குளித்தேன் அதனால் குதித்தேன் அகத்தே
களித்தேன் , கரைந்தேன் கணக்கில் அடங்காது;
நீரால் நனைந்தமையால் நெஞ்சம் மிகக்குளிர்ந்தேன்
ஆரா இனிமைதரும் ஆனந்தம் பொங்கிவர
சேரு மவளும் எனக்குறியாள் என்பேனே
பாரும் வியந்திடும் பார்த்து.!
1 Comment
உமா · ஜூலை 17, 2017 at 9 h 32 min
அருமை.