மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:
மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,
தேயாத பிறையாக,
தீராத தாகமாக,
நிறையாத பசியாக,
வாடாத மலராக,
வற்றாத ஆறாக,
வடியாத கடலாக,
கொட்டாத அருவியாக,
குளிராத வசந்தமாக,
சுவாசமில்லாத மூச்சாக,
நேசமில்லாத மனதாக,
உறக்கமில்லாத விழிகளாக ,
விழிப்பில்லாத விடியல்களாக!
இன்னும் இன்னும் ….
படைத்தவனைக் காணவேண்டும்!
ஐந்துவயதில் உள்மனதில் உருவானது!
அவ்வப்போது தலைதூக்கும்,
ஒவ்வொருமுறையும்
வெவ்வேறு கோணங்களில்
ஆராயச் சொல்லும்!
ஓர்நாள் உணர்ந்தேன்
என்னை உருவாக்கியவனை!
என்முதல் பசிக்கு
அமுதம் ஊட்டியவள்,
தாகம் எடுக்கும் முன்பே
தயாராகக் காத்திருக்கும்
அவள்கையில் எனக்கான
ஊற்றுப்பாசனம்!
தன்ஒற்றைவிரலைப்
பிடிக்கக் கொடுத்து,
உலகத்தைக் காட்டியவள்!
கடைசி உருண்டையில்
சத்துள்ளது என்பதை
முதல்வாய்ச் சோற்றில்
கூறி ஏமாற்றியவள்!
தன்விரல்பட்ட ஒவ்வொரு
சோறிலும் சத்துள்ளது என்று
அறியாது ஏமாந்தவள்!
பாதத்தில் சொர்க்கத்தை
வைத்துக் கொண்டு
தலைக்கனமில்லாமல்
நடைபோடுபவள்!
கண்களில் கருணையை
நிரப்பிக்கொண்டு
கர்வமில்லாமல்
உலாவருபவள்!
அக்னிகளைத் தான்
தாங்கிக்கொண்டு
“அம்மா” என்ற ஒற்றை வார்த்தையில்
நிழலாக நிற்பவள்!
கல்லாகிப்போன
பிள்ளைகளைக்கூட
பித்தாகிக் காத்து
நின்ற பெத்தவள்!
ஒவ்வொரு நொடியிலும்
உணருகிறேன்,
பார்க்கிறேன்,
முத்தங்கள் பெற்றிருக்கிறேன்
மடியில் துயின்றிருக்கிறேன்!
அம்மா என்னும் பெயரில்
இறைவனை உணர்த்திய
தாயே!
சேயாக என்னை
இவ்வுலகத்திற்குக் கொண்டுவந்து,
சிறகுகள் கொடுத்து
பறக்கச்செய்த உனக்கு,
என்னநான் செய்துவிடப் போகிறேன்?
எத்தனையோ
எழுதுகிறேன் உனக்காக!
ஏனோ இன்னும்
வெற்றிடமாகத்தான்
உணருகிறேன்!
எல்லாம் சொல்லிக்
கொடுத்தீங்களே அம்மா!
பெத்தக் கடன்தீர்க்க
ஒத்தை வார்த்தை சொல்லிக்கொடுக்க
ஏன் மறந்தீர்கள்?
நன்றிக்கடன் தீர்க்க
நான்என்ன புனிதம்செய்து
நிரப்பிடப் போகிறேன்?
மீண்டும் கேள்விகள் நிறைந்த சேயாக,
நிறையாத வெற்றிடமாக
நிற்கிறேன் அம்மா!