அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !
தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி, தன் துணையின்
தேவைகளைக் கவனிப்பாள் !
சிக்கென்று உடை அணிந்து
சிங்காரமாய் சிகைத் திருத்தி
சில்லென்ற குளிர் வெளியில்
சீக்கிரமாய்ப் பணிக்குச் செல்வாள் !
ஆடவர் பலருக்கு நிகராக
அயராது உழைப்பைத் தருவாள் !
ஆதாயம் தான் பார்க்காமல்
ஆனந்தமாய் அவள் உழைப்பாள் !
வீடு வந்து சேர்ந்ததுமே
வீட்டுப் பணியில் மூழ்கிடுவாள் !
விளையாடும் தன் குழந்தைக்கு
விருப்புடனே அவள் தாயாவாள் !
நாள் கணக்காய் தேய்ந்தவளும்
தோழியின் பிறந்தநாள் சிறப்பிற்கு
சென்றுவர விரும்பி கணவனிடம்,
நம்பிக்கையுடன் கேட்டாளவள் !
பெண்ணாக வீட்டில் இருப்பதுதான்
பெண்ணுக்கு அழகு என்றான் !
பெண்மைக்கிது உதவாதோ வென்று
அன்னவளும் முடங்கியே இருந்திட்டாள் !