(கட்டளைக் கலித்துறை)
பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே
பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே
மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்
பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே! (1)
பாவலன் என்றுனைப் பாமர மக்களின் பார்வியக்கத்
தேமது ரம்போல் புனைந்தாய் கவிகளைச் சீருடனே
நாமெலாம் கூடியே நாட்டி (ன்) அடிமை நலிவகற்றக்
கோமக! வீரம் நீயெம் குருதியில் குழைத்தனையே! (2)
தனத்தை விலக்கிட மண்ணின் அடிமைத் வந்தவுனைப்
பெண்ணின் அடிமை நிலையை யொழிக்கப் பிறந்தவுனைக்
கண்ணின் மணியெனக் காக்கத் தவறிக் கலங்கினோமே
எண்ணி (ன்) இதனை எரியு மிதயம் எரிமலையே! . (3)
இனிய கவிகள் இலக்கணம் குன்றா இயற்றிவைத்தாய்
துலக்க முடனே பலரும் படித்துநம் தூய்தமிழைக்
கலக்க முறாமல் படித்திடச் செய்தாய் கவிமணியே
புலவனே பாரதி! நின்றமிழ் வாழ்க பொலிவுடனே! (4)
அறிவொளி ஏற்றி அனைவ (ர்) உளத்திலும் அன்பினையே
குறையெது மின்றியே இன்கவி யாத்திடும் கூர்மதியே
மறைக (ள்) உன்றன் உரைத்தவை யாவையும் மணிக்கவியில்
நிறைவுடன் என்றும் நிலவிடச் செய்தனை நெஞ்சினிலே! . . . (5)
பாரதி காவிய பாஞ்சாலி பாத்திரப் பண்பினையே
‘பைந்தமிழ்ச் சொற்களால் பா’ரதம் ஏறியே பாடினையே
பாரெலாம் இன்புறப் பாமரர் போற்றிடும் பாவிதுவே
பாரதி நின்புகழ் வற்றுமோ? கூறிடு பாக்கடலே! . . . (6)
“சழுக்குக ளென்கிற சாதி சமய சாய்க்கடையில்
மோதிப் புழுவென மூழ்கி விடாதே முறைமையின்றி”
ஓதியே இப்படி நுண்கருத் தெல்லாம் உலகுயரக்
கோதில் கவிகளில் கோத்துவைத் தாயே குருவெனவே (7)
அச்சம் களைந்தாய் அறமு (ம்) உரைத்தாய் அடற்கவியே
“துச்ச மெனநினை துன்பினை” என்றே துணிவுதந்தாய்
இச்சை மிகுந்திட இன்றமிழ் கற்க வெனவுரைத்தாய்
உச்சிப் புகழினை எட்டிய போதேன் உயிர்துறந்தாய்? (8)
பக்தியைப் பாடிச் சக்தியைப் பாடினாய் சகலவித
வித்தையும் செப்பினாய் வீணரை மாற்றிட வீறுகொண்டே
சத்திய பாட்டையைச் சேர்ந்திடச் செய்த தண்கவியே
இத்தரை வாழ்ந்த புலவருள் யார்க்குமே ஈடிலானே! . . (9)
சிந்தித் தவன் சித்தரைப் போலவே நீ சிறப்புடனே
உத்திகள் சொல்லியே மக்கள் உணர்வை உசுப்பிவிட்டாய்
கத்தியின் கூரெனச் சொற்களைத் தீட்டிக் கவிபடைத்தாய்
புத்தியைத் தீட்டும் புலமை யவருள் புகுத்தினையே! (10)
முரட்டுக் கவியென் முண்டா சணிந்த றுரைத்தனரே
கண்டா லுனையே கிறுக்க னெனவே கதைத்தனரே
தண்டா மரைப்பூ வனையும் கவியில் தரமெதுவும்
உண்டா வெனவிகழ்ந் தாரே சிறிதும் உணர்விலரே! (11)
கருத்தில் சிலபேர் பிறவிக் கவியுன் பிணக்குகண்டார்
உறவினர் பல்லோர் உனையெதிர்த் திட்டார் ஒதுக்கிவைத்தார்
இறந்த பிறகே இவருனை யெண்ணியே ஏத்துகிறார்
மறைந்த புலவன் வரகவி என்றே மகிழ்கிறாரே! (12)
உலகக் கவிஞன் இறுதிச் சடங்கி (ல்) ஒருசிலரே
கலந்துகொண் டாரெனும் மானமில் செய்தி கடைசிவரை
உலைநெருப் பாகத் தமிழரின் நெஞ்சை உருக்குமன்றோ?
உயிர்விடு முன்னே புலவரை எல்லாம் போற்றுவோமே! (13)
1 Comment
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · ஜூலை 4, 2020 at 10 h 02 min
சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள்…