முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!
சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
……. சிந்திட வந்துப் பிறந்தனையே!
இத்தரை மக்களு மின்புற வேகவி
……. ஈன்று கொடுத்துச் சிறந்தனையே!
உத்தம யோகியே ஊருக்குள் சாதியை
……. உற்ற நெருப்பில் எரித்தவனே!
சித்தனே செந்தமிழ்ச் சீர்கவியே உனைச்
……. சிந்தனை தன்னில் நிறைத்தனமே!
பெண்ணின் சுதந்திரம் பேசியவா மதப்
……. பேடித் தனங்களை ஏசியவா!
எண்ணத் துயர்வினைக் காட்டியவா மதி
……. ஏந்திடும் ஆற்றலைத் தீட்டியவா!
பாக்களைப் பாமரர் கேட்டிடவே அதில்
……. பாங்குடன் தீக்கனல் பூட்டியவா!
மாக்களை மக்களா யாக்கியவா உனை
……. மாமனத் தேத்தித் துதிக்கின்றனம்!