(கும்மி)

கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
கூடாரத் தைவிட்டு ஓடிட வே
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
சொந்தக்கா ரக்கவி பாரதி யே!

வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்!

காக்கை குருவியைக் காதலித் தாய் – வீட்டைக்
காத்திடும் நாயினைக் காதலித் தாய்
பாக்கள னைத்தையும் காதலித் தாய் – வாழ்வைப்
பாதியில்ஏ னய்யா நீமுடித்தாய்?

இற்றைத்த மிழ்நாட்டில் நீயிருந் தால் – ஐயோ
ஏங்கித்து டித்தேயி றந்திருப் பாய்
உற்றநி லைவரும் என்றறிந் தோநீயும்
உன்னுயிர் விட்டுப்ப றந்தனை யோ?

இந்தநி லைமாறும் என்றுநம் பி – நாங்கள்
ஏங்கிக்க ழிக்கிறோம் வாழ்க்கையி னை
மந்தைக ளாயினும் உன்னையெண் ணி – இன்று
வாழ்த்துகி றோம்நீயும் ஏற்றிடு வாய்!