சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று
சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று
எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும்
எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில்
எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம்
என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி
செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற
சேமிப்பே நிலையான வெற்றி யாகும்.

உலகத்தின் வரலாற்றை உற்றுப் பாராய்
உழைப்பாலே உயர்ந்திட்ட பலரைக் காட்டும்
துலக்காத செப்புப்பாத் திரத்தைப் போல
தூங்கிக்கொண் டேயிருந்தால் உன்னைப் பார்த்துச்
சிலந்திக்கும் சிரிப்புவரும் குருவி கூடச்
சீச்சீயென் றிகழாதோ உழைப்பாய் தம்பி.
நலமாக வாழ்வதற்குப் பாதை போடும்
நாளைவரும் வரலாறும் நமக்கென் றாகும்.

ஆழ்கடலின் மீனினங்கள்அழுக்கைத் தின்றே
அக்கடலைத் தூய்மையுறச் செய்தல் வெற்றி
வாழ்ந்தாலும் மலர்போல மணத்தை வீசி
மற்றவர்க்குப் பயன்தந்து வாழ்தல் வேண்டும்
வீழ்ந்தாலும் மழைப்போல பிறருக் காக
வீழ்ந்தால்தான் வெற்றிநமை உயர்வில் வைக்கும்
தாழ்வுற்றுத் தளர்ந்தாலும் மெழுகைப் போல
சாய்ந்தால்தான் வரலாற்றில் இடம்பி டிப்போம்.

பொல்லாங்கும் வஞ்சனையும் பொய்யும் சூதும்
புவிவாழ்வில் கீழ்மையிலே சேர்க்கும் மாறாய்
நல்லன்பும் மாந்தயினக் கனிவும் கொண்டால்
நாமிறந்த பின்னாலும் வாழ்வோம் மண்ணில்
எல்லோர்க்கும் ஏற்றவிதம் வாழ்வை மாற்றி
எல்லோர்க்கும் ஏற்றவிதம் அன்பைக் கூட்டி
எல்லோரும் வாழ்வினிலே வெற்றி கொள்வோம்
எல்லோரும் “மானிடராய்” வெற்றி கொள்வோம்
★★★


1 Comment

பாவலர்மா.வரதராசன் · நவம்பர் 20, 2016 at 1 h 42 min

என் கவிதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா. மகிழ்ச்சி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »