தேங்கிக் கிடக்கும்
தேன்தமிழ் அழகைத்
தேடிக் கண்டேன் அறிதாய்!
ஏங்கித் தவிக்கும்
எந்தன் நெஞ்சின்
ஏக்கம் தன்னை அறிவாய்!
தாங்கிக் காப்பேன்
தமிழே உன்னை
தடைகள் தாண்டி வருவாய்!
நீங்கா துன்னை
நினைவில் வைத்தேன்
நெருங்கி வந்தேத் தொடுவாய்!
ஆளை மயக்கும்
அணிச்சப் பூவை
அள்ளிச் சுவைக்கத் தேடும்!
சோலை வனமா?
சுந்தரத் தமிழா?
சொந்தம் வேண்டிப் பாடும்!
மாலை நேர
மையல் நிலவை
மனத்தில் வைத்தே வாடும்!
பாலை வனத்தின்
பசுமை காண
பாய்ந்தே மனமும் ஓடும்!
கன்னல் சுவையாம்
காதல் பார்வை
காலம் எல்லாம் வேண்டும்!
மின்னல் கீற்றாம்
மேனி தன்னை
மீட்டிக் களித்திட வேண்டும்!
வண்ணப் பூங்கா
வனப்பைக் காண
வாட்டம் தொலைந்து போகும்!
பொன்னே உன்னைப்
போற்றிக் காப்பேன்
புதையல் போல நாளும்!