வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்
—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து
தூய்மையான புகழுடனே உலகம் போற்ற
—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்
சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்
—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்
தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்
—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே !

இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை
—-இனிக்கின்ற வாழ்வாக உயர்த்தும் மேலே
இழக்கின்ற கணப்பொழுது பலரின் வாழ்வை
—-இன்னலுக்கு வழிகாட்டித் தள்ளும் கீழே
இழப்பதுவும் பெறுவதுவும் காலம் தன்னை
—-இயக்குகின்ற நம்முடைய திறமை யாலே
அழகான சிந்தனையில் முயல்வோர் இங்கே
—-அருவினைகள் பலபுரிந்தே நிலைத்து நிற்பர் !

அடிப்பட்ட புறாவிற்காய் நெஞ்சிற் குள்ளே
—-அணுப்பொழுதில் சுரந்திட்ட இரக்க அன்பால்
துடித்தரிந்து தன்சதையை அளித்த தாலே
—-தூயபுகழ் சிபிபெற்றே வாழு கின்றான்
அடிப்பட்டுத் தேர்காலில் இறந்த கன்றின்
—-ஆவடித்த மணியோசை கேட்டு நாளை
முடியேற்கும் தன்மகனைக் கொன்று நீதி
—-முடிநின்ற மனுயின்றும் வாழு கின்றான் !

பொற்கால்கள் நடனத்தில் மனமி ழந்த
—-பொல்லாத கணப்பொழுதால் கோவ லன்தான்
நற்செல்வம் தனையிழந்தான் சிறப்பி ழந்தான்
—-நாடுவிட்டு வேற்றுநாட்டில் உயிரி ழந்தான்
பொற்கொல்லன் சொல்தன்னைக் காதால் கேட்டுப்
—-பொன்போன்ற கணப்பொழுதில் சிந்திக் காமல்
நற்சொல்லில் நஞ்சுதனைக் கலந்த தாலே
—-நல்லுயிரை இழந்துபாண்டி பழியைப் பெற்றான் !

கண்ணில்லா எலன்கில்லர் கல்வி கற்றார்
—-காதில்லா மீத்தோவன் இசையில் வென்றார்
நொண்டியான டாம்விட்கர் இமயம் தொட்டார்
—-நொந்துமனம் போகாமல் இவர்க ளெல்லாம்
மண்மீதில் சாதனைகள் படைப்ப தற்கு
—-மனத்துணிவைக் கணப்பொழுதும் இழந்தி டாமல்
கண்போலக் காலத்தை மதித்த தாலே
—-காலத்தைக் கடந்தின்றும் நிற்கின் றார்கள் !

கணப்பொழுதில் தோன்றிட்ட சிந்த னையின்
—-கட்டமைப்பே அறிவியலின் அற்பு தங்கள்
கணப்பொழுதும் தளராத முயற்சி யாலே
—-கண்டதுதான் இவ்வுலக சாக னைகள்
கணப்பொழுது தானேயென் றெண்ணி டாமல்
—-காண்கின்ற சிறுதுளிகள் வெள்ள மாகிக்
குணக்கடலாய் மாறல்போல் நொடி கள்தாம்
—-கூடியொரு நாளாகும் மறந்தி டாதே !

கழிந்திட்ட கணப்பொழுதோ மீண்டு மிங்கே
—-கனவினிலே வருவதன்றி நேரில் வாரா
வழிவழியாய் சொல்கின்ற சொல்லாம் பொன்னாய்
—-வாய்த்திட்ட காலத்தைக் கண்ணாய்க் காத்து
விழிப்போடே அப்பொழுதை வீணாக் காமல்
—-விளைவிக்கும் பயிரைப்போல் பயனாய்ச் செய்தால்
விழிமுன்னே நிற்கின்ற கல்லெ ழுத்தாய்
—-வீற்றிருக்கும் நம்முடைய புகழு மிங்கே !

கணப்பொழுதில் வருகின்ற கோபந் தன்னைக்
—-கழித்திட்டால் வரும்பகையோ ஓடிப் போகும்
கணப்பொழுதில் வருகின்ற சபலம் தன்னைக்
—-கழித்திட்டால் பாலியலின் நோயும் வாரா
கணப்பொழுதில் வருகின்ற ஆசை தன்னைக்
—-கழித்திட்டால் ஏமாற்றம் துயரம் இல்லை
கணப்பொழுதில் வருகின்ற பழிவெறி தன்னைக்
—-கழித்திட்டால் குரோதங்கள் வளர்வ தில்லை !

கணப்பொழுது கணப்பொழுதாய் வாழும் வாழ்க்கை
—-கழிவதினை நாமெண்ணிப் பார்ப்ப தில்லை
மணக்கின்ற வாழ்வாக வாழும் வாழ்க்கை
—-மண்தன்னில் மாற்றுதற்கே திட்ட மிட்டுக்
கணப்பொழுதைப் பயன்பொழுதாய் ஆக்கும் போதே
—-காலம்நம் பெயர்தன்னை நினைவில் வைக்கும்
மணலாக இல்லாமல் மணலி ருக்கும்
—-மாக்கடலின் முத்தாக ஒளிர்வோம் நாமும் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.