நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !
இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ
—-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார்
கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு
—-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே
முயலாமல் கிடைத்தந்தப் பணத்தாள் குத்தி
—-முகந்தன்னில் காட்டியது திருட னென்றே
அயல்வந்த அவர்களிடம் கிடைத்த செய்தி
—-அறிவித்த பின்னேதான் அமைதி பெற்றேன் !
என்னசெய்ய கிடைத்திட்ட அப்ப ணத்தை
—-எல்லோரும் தேநீரை அருந்த லாமா
என்றநண்பர் கருத்தேற்று சென்ற போது
—-எதிரிருவர் எம்முடனே சேர்ந்து கொண்டார்
முன்சென்ற இருவரிதைக் கேட்டே எங்கள்
—-முதுகோடு தாங்களுமே சேர்ந்து கொள்ள
பின்னிருவர் தேநீரின் கடையில் சேரப்
—-பிட்டிற்கு மண்சுமந்த கதையா யிற்று !
கிடைத்ததுவோ ஐம்பதுரூ தாளோ ஒன்று
—-கிளைபரவி சேர்ந்தவரோ ஒன்ப தின்மர்
வடையெடுத்த காகத்தின் சோகம் போன்று
—-வந்தாற்போல் போயிற்று இரட்டிப் பாக
கிடைத்தாலும் சொந்தமில்லா பொருளை ஏற்றால்
—-கிடைத்ததுபோல் ஏமாற்றும் சூதாட் டம்போல்
விடைபெற்றுப் போயிற்றென் பொருளைச் சேர்த்து
—-விளைவெனக்கு நற்பாடம் உங்க ளுக்கும் !
1 Comment
கி.தெய்வேந்திரன் · ஆகஸ்ட் 31, 2016 at 16 h 21 min
வரவு 50
செலவு 100 …..
நாளைல இருந்து நடை பயிற்சியே வேண்டாம் (நடைபாதையில் கேட்பாரற்று இருக்கும் பொருளே) ….