உலாவரும் நிலவொன்றை
உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு
நீண்டுவிடும் என்கைகளே !!

அன்னைதந்த சோற்றினையும்
அகமகிழ்ந்து உண்ணுகின்றேன்
முன்பின்னே அறிந்ததில்லை
முகமலர்ந்து நிற்கின்றேன்
அன்புடைய கைகளினால்
அமுதத்தைத் தந்துநின்றாள்
என்னுடனே அவளிருந்து
எனக்களித்தாள் பாசத்தை .

வண்ணமகள் அன்னையிங்கே
வாடிடலும் கூடாதென்றே
திண்ணமுடன் நிலாச்சோறு
தின்னுகின்றேன் மனமகிழ்ந்து .
விண்ணுலகம் எனைப்பார்த்தே
வியப்புடனே நிலமகளை
மண்ணுலகம் நோக்கியுமே
மறுப்பின்றி அனுப்பிடுவாள் .

நிலவுக்கு நிகராக
நின்றிடுவாள் எனதன்னை .
மலரனைய கைகளினால்
மங்கையவள் மனமகிழ்ந்து
பலரின்கண் படாமலேயும்
பரிசுத்த அன்பினாலே
நிலவுநோக்க ஊட்டிடுவாள்
நிலாபெண்ணும் இவளன்றோ !!!