மாறி கால இரவொன்றில்
பிரயத்தனமின்றி சுமக்கும்
மிகையான குளிரில்
அவள் நிர்மலமான
நொடிகளை ஒவ்வொன்றாய்
கடக்கும் போது
தனிமைத் தீர்க்க வந்த
இன்னொரு அவள்
கவிதைகள் பற்றிய
கோணங்களை வட்டங்களுக்குள்
அடக்குகிறாள்
சில்லரைத்தனமான
சொற் சேர்க்கை வெறும்
பேச்சுகள் என்றும்
அகராதி மறைத்த
செறிவான பதங்கள்
கொண்டு ஆழந்த
அர்த்தங்களாயும்
சிலேடைகளாயும்
மர்மங்களாயும்
சுருக்கியும் விரித்தும்
சுவாரசியமாகவும்
புனைவதன் சிறப்பை
விபரித்துக் கொண்டே
அவள் சொல்லும் கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்தேன்
முடிவில் சிறந்த கவிக்கான
பட்டத்தை நான்
வாங்கிக் கொண்டிருக்க
இன்னொரு அவளான அவள்
எனக்குள் அடங்கி
குதூகலித்துக் கொண்டிருந்தாள்