சுட்டுவைத்தேன் பணியாரம்
சூடாறும் முன்னே
தட்டினிலே பரப்பிவைத்தேன்
தானாக விற்குமென்று .
மொத்தமாய் வித்திட்டு
முதலீடு செய்யலாமென்று
சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன்,
சாப்பிட யாரும் வரவில்லை .
என்னென்ன நினைத்திருந்தேன்
ஏழெட்டுத் திட்டம்போட்டேன் ,
அடுக்குமாடிக் கட்டியதில்
ஆடம்பரமாய் ஆடப்பார்த்தேன்.
அழகானக் கப்பல்வாங்கி
அயல்நாடு செல்ல பார்த்தேன் .
அத்தனையும் பாழாச்சே !
அறுந்துப்போன நூலாச்சே !
பாவிக்கண்ணுப் பட்டதுவோ
பாதகமாய் ஆயிடுச்சே !
கொள்ளிக்கண்ணுப் பட்டதுவோ
கூவிவிற்றும் வாங்கலியே !
பட்டக் கஷ்டம் வீணாச்சே !
பாவமென்றுப் பார்க்கலியே
உதடு மட்டும் சிரிக்குது
உள்ளமெல்லாம் கொதிக்குது.
உடலு மட்டும் நடக்குது,
உயிரெல்லாம் பறக்குது .
ஊமையன் கண்டக் கனவாக
உருக்குலைந்துப் போனதய்யா !