(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)
பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!
நாடுகிற எண்ணத்தின் நம்பிக்கை கோள்களாய்க்
காடுகரை வித்திட்டுக் காய்கள் பயிரிட்டு
மேடுகளைச் சீர்செய்து மென்மையாகச் செப்பனிட்டு
வாடுகிற மண்ணையும் வாழ்விப்போர் பாட்டாளி!
உளமெல்லாம் வேண்டும் உணவுதனை ஆக்க
தளமாக மண்ணினில் தானியங்கள் நட்டு
வளமான நல்லுரம் வாஞ்சையுடன் தூவிப்
பலந்தரும் காயும் பயிரிட்டு வாழ்வளிக்கும்
உழவனின் கைகள் உழுதிடும் மண்ணை
அளவாக்கி கூறுபோட்டு ஆகாய மெட்ட
மளமளவென் றேயடுக்கு மாடிவீடு கட்டும்
அலகீட்டால் மாந்தரிங்கு ஆரோக்கியம் கெடுப்பர்!
கட்டுகின்ற வீடுகளும் கட்டடங்கள் விண்முட்ட
எட்டிவதற் கென்றே எடுப்பாய் அமைகின்ற
கட்டுமான வேலையைக் காக்கும் தொழிலாளி
பட்டதுயர் அத்தனையும் பாழுங் கிணற்றிடீர்!
திட்டமாகக் குப்பைகளைத் தீங்கின்றி நீக்கிநல்
தொட்டிலாக்கும் துப்புரவுத் தொண்டாற்றும் நல்லோரை
மட்டமான கீழ்நிலை மாந்தராகத் தள்ளுவது
தட்டில் உணவிட்டுத் தட்டிப் பறிப்பதன்றோ!
உண்மை உழைப்பில் உயர்வென்ன தாழ்வென்ன
மண்ணை வளமாக்கி மாசின்றிக் காத்திடும்
வண்ணம் செயலாற்றும் வாஞ்சையாளர் யாவருமே
கண்ணின் மணியெனக் காப்பவராம் இந்நிலத்தை!
எண்ணம் உயர்வாக்கி ஏற்றமான அன்பினால்
திண்ணமாகப் பங்காற்றித் தித்திக்கும் ஒற்றுமை
தண்மையெனும் நீரூற்றித் தாழ்வு மனம்விடுப்போம்
பண்புயர் மாந்தரெனும் பாலமாகிச் சீர்பெறவே!