என் மூக்குத்தி தேவதைக்கு …
காதலே கடிதந்தான்
பார்வைதான் அதன் எழுத்தென்றாலும்
மொழி மேடையில் கவிதை நாட்டியம் ஆடத்தான்
ஆசைப்பட்டது அவனது ஊஞ்சல் மனசு
அவளுடைய வார்த்தை தேகத்தில் பூத்த வியர்வைத் துளிகள்தான்
அவனுக்குத் தெரிந்த ஒரே ஒரு தேன் .
அவனுடைய பேச்சுக் கிண்ணத்தில்
அவளுடைய புன்னகை மது ஊற்றி அவன் குடித்தபோதுதான் கண்டான்
காதல்
போதையுடன் தள்ளாடியதை
நேர மேகத்தில் அவன் இருதயம் ஊர்வலம் போனது
அந்த வானத்து அழகியை நோக்கி
சின்னச் சின்ன சண்டைகள் இனித்தன
கரும்புத் துண்டுகளாக
காதல் ஞானம் அடைந்த
ஒரு புத்தனாக அவனை மாற்றியது
அவள் அழகெனும் மதம்
தூரத்தை மிக அருகில் இருத்தி விடுகிறது
காதல்
உடல்கள் களைந்துவிட்டு மனதை நிர்வாணாமாக்கி ரசிக்கிறது
காதல்
அந்தக் காதல் வீரனின் இதயவாள்
நினைவுகள் கீறக்கீற அன்பு வடிந்து கொண்டிருந்தது
அமுத பானமாக
தன்னை ஒரு வானமாகத் திறந்து
எண்ணங்களை நட்சத்திரங்களாக விதைத்து
அந்த நிலாவைக் குடியேற்றும் அன்பு நடவடிக்கைதான்
அவனின் கடிதம்
” என் மூக்குத்தி தேவதைக்கு …
உன் மூச்சுக்காய் காத்துக்கிடக்கு புல்லாங்குழல்
ஒரு பேச்சுக்காய் பூத்துக்கிடக்கு செவ்வாயிதழ்
குங்குமப் பொட்டு வைத்த நீ என் பூவு
நடந்து வரும் கரும்புக் கட்டு நீ என் தேனு
அம்பு விட்டு எய்யும் நீ புள்ளி மானு
கடிக்க வரும் எறும்பு நீ கட்டிப் பாலு
உன் மழைக்காய் வேர்த்துக் கிடக்கு இதயவயல்
கரு மேகத்துக்காய் பார்த்துக் கிடக்கு அன்புமயில்
இப்படிக்கு
எனக்குள் நீ ”
அவள் வாசற் கதவு தட்டுவதற்கு
கடிதமொன்று செல்லும்
காதல் வேசமிட்டு .